’பிரம்மாஸ்திரம்’ இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக இருக்கும் - எஸ்.எஸ்.ராஜமெளலி நம்பிக்கை
‘பாகுபலி’ ‘கே.ஜி.எப்’ போன்ற படங்களில் வெற்றியின் மூலம் திரைப்பட வியாபாரம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட ஒரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் பல மொழிகளில் பல மாநிலங்களில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில், இந்திய சினிமாவின் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘பிரம்மாஸ்திரம் - பாகம் 1’. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்ஷன்ஸ், பிரைம் போக்கஸ் மற்றும் ஸ்டார்லைட் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகமான ‘பிரம்மாஸ்திரம் - பாகம் 1’ வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடுகிறார்.
படத்தின் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர், நாகர்ஜூனா, இயக்குநர் ராஜமெளலி ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தனர்.
இதில் படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, “நான் இங்கு இயக்குநராக வராமல், திரைப்படத்தை வழங்கும் ஒருவராக வந்திருக்கிறேன். பிரமாஸ்திரம் இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கபட்ட ஒரு கற்பனை கலந்த கதை தான் இது. இந்த திரைப்படம் 8 வருட கடின உழைப்பு. இந்த படத்தில் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி.” என்றார்.
நடிகர் ரன்பீர் கபூர்ர் பேசுகையில், “பிரமாஸ்திரம் திரைப்படத்தை உங்கள் முன் எடுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கும் சமூகத்தில் நான் என் திரைப்படத்தை எடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலக்கதையை இயக்குனர் என்னிடம் 10 வருடத்திற்கு முன் கூறிய போது, அந்த ஐடியா எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அமிதாப், நாகார்ஜுனன் போன்ற திரை ஜாம்பவான்களுடன் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படத்தில் தான் நான் ஆலியாவுடன் பழக ஆரம்பித்தேன் இப்போது கல்யாணம் ஆகிவிட்டது எனக்கு இந்தப்படம் மிக முக்கியமான படம் உங்கள் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். ” என்றார்.
நடிகர் நாகார்ஜுனா பேசுகையில், “இயக்குநர் அயன் ஒரு காமிக் புத்தகத்துடன் என்னை அணுகினார், அதை படிக்க சொன்னார். அதில் எனது கதாபாத்திரத்தின் முழு தகவலும் இருந்தது. எனது கதாபாத்திரம் நந்தி அஸ்திரத்தை மையப்படுத்தி இருந்தது. எனக்கு இதிகாசங்கள் மேல் எப்பவும் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனால் இதிகாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்ட கதை என்பதாலே நான் இதில் நடிக்க ஒத்துகொண்டேன். படத்தின் விஷுவல்கள் சிறப்பாக வந்துள்ளது. அயன் உடைய 10 வருட உழைப்பு இந்த திரைப்படம். ரன்பீர் ஆலியா மிகச்சிறந்த உழைப்பாளிகள். சினிமா மீது காதலுடையவர்கள் இந்தப்படம் பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.
இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் பேண்டஸி சாகசம், காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதையாக சொல்லப்பட்டிருப்பதோடு, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத ஒரு திரைப்படமாகவும், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் ஒரு படைப்பாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.