Jun 10, 2022 07:10 PM

நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ஆக்‌ஷன் படம் ‘தக்ஸ்’

நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ஆக்‌ஷன் படம் ‘தக்ஸ்’

இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரான பிருந்தா, ‘ஹே சினாமிகா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானர். தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ள பிருந்தா, இந்த முறை அதிரடி ஆக்‌ஷன் படத்துடன் இயக்குநராக களம் இறங்குகிறார்.

 

‘தக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

 

குமரி மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் ‘மும்பைகார்’ என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் ஹிர்ருது ஹாரூன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, சிம்ஹா மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் குமரியை சேர்ந்த பலரை இப்படத்தின் மூலம் பிருந்தா நடிகராக அறிமுகப்படுத்துகிறார். 

 

பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ' தக்ஸ் ' படத்தில் மூன்று பிரபலமான முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள்.

 

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். 

 

Thugs

 

இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.