Aug 01, 2022 06:27 AM

பிருந்தாவின் இயக்கத்தில் உருவாகும் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

பிருந்தாவின் இயக்கத்தில் உருவாகும் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

பிரபல நடன இயக்குநர் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ என்ற காதல் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது தனது இரண்டாவது படத்தை அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக இயக்கி வருகிறார். ‘தக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் குமரி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு மிரட்டும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

 

பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.  பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ' தக்ஸ் ' படத்தில் பிரபல சண்டை பயிற்சி  இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் ஃபோனீக்ஸ் பிரபு ஆகிய இருவரும் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

 

குமரி மாவட்டத்தைக் கதையின் பின்னணி களமாக கொண்டிருந்தாலும், இப்படத்தின்  படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஆக்சன் படமான ‘தக்ஸ்’ படத்தின் டைட்டில், கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்கியது. நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நட்ப கலைஞர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘தக்ஸ்’ படத்தின் படபிடிப்பு திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.  படபிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

‘தக்ஸ்’ படத்தின் டைட்டில் வெளியானவுடன், இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பினை எகிற வைத்தது- இதனையடுத்து படக்குழுவினரும்  திட்டமிட்டப்படி மூன்று மாதக் காலக்கட்டத்திற்குள் பட பிடிப்பு நிறைவு செய்திருக்கிறார்கள்.  இதன் காரணமாக ‘தக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

 

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றி பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.