‘கனெக்ட்’ புதிய அனுபவம் தரும் திகில் படமாக இருக்கும் - இயக்குநர் அஸ்வின் சரவணன்
நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மாயா’ மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘கனெக்ட்’. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம்கெர், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அஸ்வின் சரவணன் படம் குறித்து கூறுகையில், “கொரானா ஊரடங்கு காலத்தில் நடக்கும் கதை இது. முழு படமும் 95 நிமிடங்கள் தான். படத்தில் இடைவேளை இல்லை, இது ஒரு பரிசோதனை முயற்சி தான். பொதுவாக ஹாலிவுட் படங்களில் இடைவேளை கிடையாது. ஆனால், இங்கு அந்த படங்கள் வரும் போது குறிப்பிட்ட நேரத்தில் கட் பண்ணிவிட்டு தான் இடைவேளை விடுவார்கள். மூன்று மணி நேர படம் என்றால் அதற்கு இடைவேளை விட்டு பார்க்கலாம். ஆனால், 95 நிமிட திரைப்படத்தை எந்தவித இடைவேளையும் இல்லாமல் பார்க்க முடியும், என்பது என் தனிப்பட்ட கருத்து என்றாலும், மற்றவர்களாலும் இது ஏன் முடியாது என்று தோன்றியது.
அதுமட்டும் இன்றி, 95 நிமிட திகில் திரைப்படத்தை இடையில் எந்தவித கட்டும் இல்லாமல் பார்த்தால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு புதிய உணர்வை தரும் என்று தோன்றியது. அதனால் தான் இதை முயற்சித்தோம். இடைவேளை இல்லை என்றால் திரையரங்கங்கள் ஒப்புக்கொள்வார்கள? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இது பற்றி அவர்களுடன் ஆலோசிக்கையில் அவர்களும் இந்த பரிசோதனை முயற்சியை செய்து பார்க்கலாம், என்று சொன்னார்கள். அது மட்டும் அல்ல, படம் 95 நிமிடம் என்பதாலும், இடைவேளை இல்லை என்பதால் கூடுதல் காட்சிகள் போடலாம் என்றும் ஆலோசித்திருக்கிறோம்.
பேய் படங்கள் நிறைய வருகிறது. நானே எடுத்திருக்கிறேன் ஆனால், மற்ற பேய் படங்களுக்கும் கனெக்ட் படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக பேயை விரட்டுபவர்கள், நேரடியாக வந்து தான் அதை செய்வார்கள். ஆனால், இந்த கதை ஊரடங்கு சமயத்தில் நடப்பதால், ஆன்லைன் மூலமாக பேய் ஓட்ட முயற்சிப்பது புதிதாக இருக்கும். அந்த வேடத்தில் அனுபம்கெர் நடித்திருக்கிறார். அவர் இந்த கதையை கேட்டு நடிக்க சம்மதித்ததும், பாராட்டியதும் மறக்க முடியாது.
திகில் படங்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். பொதுவாக திகில் படங்கள் என்பது அனைவருக்கும் பிடித்தது தான். ஆனால், ஒரு முழுமையான திகில் படங்கள் இங்கு குறைவாகவே வருகிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய படத்தை முழுமையான திகில் படமாக எடுக்கிறேன். பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குள் நாம் போக கூடாது. பேய் என்றால் எல்லோருக்குள்ளும் ஒரு பயம் இருக்கும், அந்த பயத்தை திரையரங்கில் கூட்டமாக உட்கார்ந்து போக்கும் ஒரு வடிவமாகவே திகில் படங்களை நான் பார்க்கிறேன்.
15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படி ஒரு வேடத்தில் நடிக்க அவர் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அவருக்கு கதையும், கதாபாத்திரமும் தான் முக்கியம். மாயா படத்திலும் அப்படித்தான், அவர் கதையை மட்டுமே நம்பி நடித்தார். இந்த கதையும் நான் அவருக்காக எழுதவில்லை, கதையை எழுதிவிட்டு அவரிடம் கூறிய போது ஒகே நான் நடிக்கிறேன், என்று சொல்லிவிட்டார். படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்படும்.
ஊரடங்கில் நடக்கும் பேய் கதை, பேயை ஆன்லைன் மூலம் ஓட்ட முயற்சிப்பது போன்ற விஷ்யங்கள் ரசிகர்களுக்கு புதிய உணர்வை தரும். படத்தின் தொழில்நுட்ப பணிகள் மிகவும் பேசப்படும். படத்தை திரையரங்குகளில் பார்த்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதனால், தான் திரையரங்கில் படத்தை வெளியிடுகிறோம்.
திகில் படங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல, ஆனால் என்னிடம் அதை தான் விரும்புகிறார்கள். அவர்களையும் குறை சொல்லவில்லை. ஆனால், திகில் ஜானரை தவிர்த்து மற்ற ஜானர்களிலும் படங்கள் இயக்க நான் விரும்புகிறேன், அதற்கான கதைகளும் என்னிடம் இருக்கிறது. நிச்சயம் அப்படிப்பட்ட படத்தை விரைவில் இயக்குவேன், என்று நம்புகிறேன்.” என்றார்.