Sep 22, 2017 06:07 AM

அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்தித்தது பெரிய பாக்கியம் - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்தித்தது பெரிய பாக்கியம் - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று சென்னையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

 

கமல்ஹாசன் நிருபர்களிடம் சந்திப்பு குறித்து பேசுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிப்பான யாவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்த பொழுதே இந்த விட்டிற்கு அரசியல் தொடர்பு இருந்தது. நான் தான் சற்று ஒதுங்கி இருந்தேன். கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருபவர். அவரிடம் இருந்து பல விசயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.

 

சந்திப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “நடிகர் என்ற முறையிலும் நல்ல மனிதர் என்ற முறையிலும் கமல்ஹாசனுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நாட்டின் தற்போதைய நிலை குறித்து இருவரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். நாடு ஊழலாலும், மதவாதத்தாலும் பாதிப்படைந்துள்ளது. நாட்டில் மதவாதத்திற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கமலும் அப்படிப்பட்ட கருத்து உடைய ஒருவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம், இனியும் விவாதிப்போம்.” என்று தெரிவித்தார்.