’டெக்ஸ்டர்’ அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் - கே.ராஜன் நம்பிக்கை

ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER). ‘வெப்பன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் ராஜு கோவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக யுக்தா பிரேமி நடித்திருக்கிறார். வில்லனாக அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீனிவாச் எஸ்.பாபு படத்தொகுப்பு செய்ய, மோகன் ராஜன் பாடல்கல் எழுதியுள்ளார். சினேகா அசோக் நடனம் அமைத்துள்ளார். அஷ்ரப் குருக்கல் மற்றும் கே.டி.வெங்கடேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ‘டெக்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உத்ரா பிலிம்ஸ் சார்பில் ஹரி உத்ரா வெளியிடுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 17 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, தாயரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சூரியன்.ஜி பேசுகையில், ”டெக்ஸ்டர் படத்தின் வாய்ப்பு கிடைப்பதற்கு என் நண்பர் தான் காரணம். நான் மலையாள சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் எனக்கு இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்தது. டெக்ஸ்டர் அமெரிக்காவின் பிரபலமான வெப் சீரிஸ். சிறுவயதில் தன் அம்மா கற்பழித்து கொலை செய்யப்பட்டதை பார்க்கும் சிறுவன், பெரியவன் ஆனதும் அம்மாவை சீரழித்தவர்களை தேடிப்பிடித்து கொடூரமாக கொலை செய்வார். அதுவே அவருக்குப் பிடித்துப் போக தொடர்ந்து கொலை செய்ய தொடங்குவார். அந்த கதையின் தொடர்ச்சியாக தான் நான் இந்த கதையை எழுதியிருக்கிறேன். என்னுடைய டெக்ஸ்டர் படத்திலும், சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதன் மூலம் நடக்கும் கொலைகள், அதன் விசாரணை என்று படம் சுவாரஸ்யமான சைக்கோ திரில்லராக பயணிக்கும். என் படத்தில் நடித்திருக்கும் நாயகன் மற்றும் வில்லன் இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் அவர்களுக்கு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். படத்தின் இசை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசுகையில், “பொன்னாடை வேண்டாம் என்று பல நிகழ்ச்சிகளில் சொல்லி வருகிறேன், யாரும் கேட்க மாட்டுகிறார்கள். நம்ம ஊரில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க வேண்டும். முதலில் நம்ம மக்களை பாருங்கள் பிறகு இந்த பொன்னாடை தயாரிக்கும் சூரத் போன்ற வெளிமாநிலங்களை பார்க்கலாம். அது போல் திரைப்படங்களிலும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், பிறகு வேறு மாநிலத்தவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் இயக்குநரை வைத்து கன்னட தயாரிப்பாளர் தயாரித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பான் சவுத் இந்தியா படமாக இருக்கிறது. படத்தின் கதை பற்றி இயக்குநர் சொன்னார், சிறப்பாக இருந்தது. இது சைக்கோ திரில்லர் என்பதால் இதற்கு மொழி தேவையில்லை, அனைத்து மொழிகளிலும் இந்த படம் ஓடும். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனவே, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழில் படம் தயாரித்த கன்னட தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள். மற்ற மாநிலத்தில் இருப்பவர்கள் தமிழகத்தை நம்பி படம் எடுக்க வரவேண்டும், தமிழர்கள் நாங்கள் கெட்டாலும் மற்றவர்களை வாழ வைப்போம், என்று கூறிக்கொண்டு டெக்ஸ்டர் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “டெக்ஸ்டர் நல்ல தலைப்பு, படமும் நன்றாக இருக்கும் என்று பாடல் மற்றும் டிரைலர் நிரூபிக்கிறது. இப்போதெல்லாம் சிறிய படங்களுக்கு அழைத்தால் உடனே சென்றுவிடுகிறேன், காரணம் அனைத்து சிறிய படங்களும் ஓடுகிறது. சமீபகாலமாக பெரிய படங்கள் வெற்றி பெறுவதில்லை. காரணம் அதில் நடிகர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். ஆனால், சிறிய படங்களில் நல்ல கதை இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமாவின் தரம் பற்றி குறை சொல்ல முடியாது. ஆனால், கண்டெண்ட் இல்லை. நாங்கள் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பான படம் எடுத்தோம். ஆனால், இப்போது பல கேமராக்களை வைத்துக்கொண்டு கண்டெண்ட் இல்லாமல் எடுக்கிறார்கள். தெளிவான திரைக்கதை, தெளிவான காட்சி அமைப்பு இருக்கும் திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். மூன்று கேமரா வைத்து எடுப்பவர்கள் தான் சிறந்த இயக்குநர் என்று நடிகர்கள் தப்பா நினைக்கிறார்கள். ஒரே ஒரு கேமரா வைத்து எதை எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பவன் தான் இயக்குநர், அது இந்த படத்தில் இருக்கிறது. இயக்குநர் சூரியன்.ஜி சிறப்பாக இயக்கியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட முத்தக்காட்சிகள் இருக்கிறது, ஆனால் அதை நெருடல் இல்லாமல் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நடன இயக்குநருக்கு வாழ்த்துகள்.
இந்த படம் மிக சிறப்பாக இருக்கிறது, ஆனால் இதை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும், அப்போது தான் படம் வெற்றி பெறும். இன்று படம் எடுப்பது சுலபம், அதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சிரமம். அதனால், படம் வெளியீட்டின் போது விளம்பர பணிகளை சரியான முறையில் திட்டமிட்டால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது, படம் வெற்றி பெற்றால் திரையரங்கங்கள் அதிகரிக்கும். அதேபோல் சினிமாவை சுதந்திரமாக விட்டால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். இன்று ஆட்டம் போட்டவர்கள் நாளை ஆட்டம் இல்லாமல் போவார்கள், இன்று அமைதியாக இருப்பவர்கள் நாளை ஆட்டம் போடுவார்கள், அதனால் சினிமாவை மட்டும் சுதந்திரமாக விட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். அறிமுக இளைஞர்கள் வளர்ந்து வரும் கலைஞர்கள், புதிய தயாரிப்பாளர் இணைந்து எடுத்திருக்கும் இந்த படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “டெக்ஸ்டர் படத்தின் டிரைலரை பார்க்கும் போதே இது ஒரு திரில்லர் படம் என்பது தெரிகிறது. ராஜன் சார் சொன்னது போல் இதுபோன்ற படத்திற்கு மொழிகள் தேவையில்லை, பார்க்க கண்கள் இருந்தாலே போதும். இயக்குநர் சூரியன்.ஜி, சுந்தர்.சி, கோகன்.ஜி போல் வெற்றி பெறுவார். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. நாயகன் நல்ல உயரம், நல்ல கலர், ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. கதாநாயகி ஹோம்லியாக இருக்காங்க, அதே நேரத்தில் மாடர்ன், கவர்ச்சி என அனைத்தையும் சிறப்பாக செய்கிறார். வில்லன் அபிஷேக் நல்லா பண்ணியிருக்கார். சிறிய படம் என்று சொல்வார்கள், ஆனால் படம் வெளியான பிறகு சிறிய படங்கள் பெரிய படமாகி விடுகிறது. இன்று சினிமாவில் சிறிய படங்களுக்கு அதிகமாக திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், குறை சொல்லாமல் ஏன்? என்று சிந்திக்க வேண்டும். ஒரே நேரத்தில் பத்து படங்கள் வெளியானால் எப்படி ஓடும், மக்கள் எப்படி பார்ப்பார்கள். அதனால் நமக்குள் ஒரு கட்டுக்கோப்பு வேண்டும். இந்த டெக்ஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, இயக்குநர் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
கதாநாயகி யுக்தா பிரேமி பேசுகையில், “ஒரு நாள் படத்தின் மேனஜர் எனக்கு போன் செய்து, ஒரு படம் பற்றி பேச வேண்டும் என்று அழைத்தார். அதன்படி நானும் சென்ற போது அனைவரும் அங்கிருந்தார்கள், அரை மணி நேரத்தில் பேசி முடித்துவிட்டு, எனக்கு சம்மதமா என்று கேட்டார்கள், நான் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன். சஸ்பென்ஸ் திரில்லர், சிறுவயது டிராமா, காதல் என அனைத்தும் படத்தில் இருக்கிறது. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. நான் மகராஷ்டிராவைச் சேர்ந்தவள், இப்போது பெங்களுரில் செட்டிலாகியிருக்கிறேன், நான்கு வருடங்களில் கன்னட மொழியை நன்றாக பேச கற்றுக் கொண்டேன், அதுபோல் அடுத்த முறை தமிழகத்தில் பேசும்போது நிச்சயம் தமிழில் பேசுவேன், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
நடிகர் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் பேசுகையில், “இயக்குநர் சூரியன் சார் என்னை அழைத்த போதும் எனக்கு வில்லன் வேடம் என்று தான் சொன்னார், ஆனால் இன்று என்னை ஹீரோ என்று சொல்கிறார். அதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நானே ஒரு கோட்டில் பயணிக்கும் போது திடீரென்று ஹீரோ என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு இதுவே போதும். எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. ஐடி துறையில் பணியாற்றினேன், பிறகு விளம்பரத்துறையில் பணியாற்றினேன், இன்று நடிகராக உங்கள் முன்பு நிற்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கு பின்னாடி நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது, அந்த கதாபாத்திரம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் நான் மட்டும் அல்ல, அதன் பின்னணியில் பலர் பணியாற்றியிருக்கிறார்கள். அதன்படி, இயக்குநர் சூரியன் சார் ஒரு சிறந்த குழுவை உருவாக்கினார். விநியோகஸ்தர் ஹரி சார் வந்தவுடன் இந்த படத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது. இப்போது உங்கள் முன்பு நிற்கிறோம். இந்த படத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், நன்றி.” என்றார்.
நடிகர் ராஜு கோவிந்த் பேசுகையில், “டெக்ஸ்டர் படத்திற்காக முதலில் தயாரிப்பாளர் பிரகாஷ் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சூரியன் சார், படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி. இந்த படம் ஒரு திரில்லர் ஜானர். பொதுவாக திரில்லர் படங்களில் ஏன்? என்ற கேள்வி இருக்கும், ஒரு விசயம் செய்தால் இது எதற்கு? என்ற கேள்வி இருக்கும். படப்பிடிபு நடந்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காட்சியில் எங்களுக்குள் ஏன்? என்ற கேள்வி வரும், எதற்காக இந்த கதாபாத்திரம் இதை செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால் உடனே அதை நிறுத்திவிடுவார், அதற்கான சரியான பதில் கொடுக்காமல் அந்த காட்சியை எடுக்க மாட்டார், அப்படி தான் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விளக்கங்களை கொடுத்து சூரியன் சார் எடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், “டெக்ஸ்டர் படம் என்னுடைய பயணத்தில் ஒரு வித்தியாசமான படம். இயக்குநர் மற்றும் பி.ஆர்.ஓ தான் இந்த படத்தை வெளியிடுமாறு என்னை அனுகினார்கள். படம் பார்த்தோம், வித்தியாசமாக இருந்தது. சிறு வயதில் நடக்கும் ஒரு சம்பவம், அதனால் ஏற்படும் வெறுப்பை மனதுக்குள் வைத்திருப்பதால் பின்னாளில் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் கதை. அதேபோல் ஒரு மெசஜ் சொல்லியிருந்தார்கள். மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை கேட்டிருந்தால், இவ்வளவு தூரத்திற்கு இந்த விசயம் வந்திருக்காது, என்ற ட்விஸ்ட் படத்தில் இருக்கும், அது ரொம்ப நல்லாவே இருக்கிறது. இந்த படத்தின் மீது இயக்குநர் சூரியன் சார் நம்பிக்கையோடு இருக்கிறார், அதற்கு படத்தின் கதை முக்கிய காரணம். இன்று சிறு முதலீட்டு படங்களுக்கு பத்திரிகையாளர்கள் நிறைய சப்போர்ட் பண்றாங்க, இன்னும் நிறைய பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், அதற்காக பத்திரிகையாளர்களுக்கும், பிரசாத் லேபிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது, ஆனால் இன்று அதையும் தாண்டி மற்றொரு சிக்கல் உருவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் தேவா சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்கப்போவதில்லை, என்று அறிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இப்போதெல்லாம காப்பிரைட் பிரச்சனை சிறிய படங்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. ஒரு இயக்குநர் தான் சந்தித்த, அனுபவித்த சில சம்பவங்களை, நிகழ்வுகளை தங்களது படங்களில் எங்கேயாவது சிறியதாக பதிவு செய்ய விரும்புகிறார்கள், அதற்காக எதாவது ஒரு மூளையில் சில படத்தின் பாடல்கள் சிறியதாக இடம்பெறுகிறது, இதற்கு காப்பிரைட் சொல்லி பல லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். இது சிறிய படங்களை பெரிதும் பாதிக்கிறது. எனவே இந்த காப்பிரைட் பிரச்சனையில் இருந்து சிறிய படங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பணம் கேட்கலாம் சிறு தொகை கேட்டால் பரவாயில்லை, பெரியதாக கேட்டால் தயாரிப்பாளரகள் கஷ்ட்டப்படுவார்கள். எனவே இதை தமிழ் திரையுலகிற்கு ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். சிறிய படங்களுக்கு தயவு செய்து காப்பிரைட் கேட்க வேண்டாம். டெக்ஸ்டர் படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “படத்தோட டிரைலரை பார்க்கும் போது திரில்லர் ஜானர் என்பது தெரிகிறது. உண்மையாக இது சந்தோஷமான மாலையாக இருக்கிறது. படத்தின் கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் திறமையைப் பற்றி விருந்தினர்கள் நன்றாக பேசினார்கள். இங்கு ஹீரோ, வில்லன் என்று பேசினாலும், இறுதியில் அனைவரும் நடிகர்கள் என்பது தான் உண்மை. அந்த விதத்தில் அனைவரும் அவர் அவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். படம் தரமாகவும், அழகாகவும் இருக்கிறது. கிரைம் திரில்லர் படங்களை எல்லாம் பல கோடிகள் செலவு செய்து எடுக்கிறார்கள், ஆனால் அவற்றை பார்க்கிறது போல் இருக்காது. ஆனால், டெக்ஸ்டர் அப்படி இல்லாமல் ரொம்ப அழகான கிரைம் திரில்லர் ஜானர் படமாக இருக்கிறது. மிகப்பெரிய் ஹீரோக்களின் படங்கள் பார்க்கிற மாதிரி இல்லை, பாடல்கள், நடனம் என அனைத்துமே வல்கராக இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் அனைத்தும் அழகாக இருக்கிறது, எந்தவித ஆபாசமும் தெரியவில்லை, அந்த விதத்தில் பாடலை வைக்க வேண்டும் என்று இல்லாமல், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களை எடுத்திருக்கிறார்கள். லொக்கேஷன், இசை, வரிகள் என அனைத்துமே நன்றாக இருக்கிறது. இந்த படக்குழுவினர் பேசும் போதே அவர்களிடம் ஒரு ஒற்றுமை தெரிகிறது, நம்பிக்கை தெரிகிறது. கதை இருக்கிறது, திரைக்கதை நிச்சயம் நன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள், இயக்குநர் சூரியனுக்கு வாழ்த்துகள். சின்ன படம் பெரிய படம் என்பது எனக்கு தெரியவில்லை, படம், சினிமா அவ்வளவு தான். அந்த சினிமா தான் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சின்ன படங்களை வாழவைப்பது ஊடகங்கள் தான், இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். சினிமாவுக்கு மொழி இல்லை, ஊமை படங்களும் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனவே சினிமாவுக்கு மொழி தேவையில்லை, ஆனால் சினிமாவை நம்பியிருப்பவரகள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள், நடிகர்களாகட்டும், தொழில்நுட்ப கலைஞர்களாகட்டும், அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை தான் நம்பியிருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த மொழி பேசினாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டை நம்பியிருப்பவ்ர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.