புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காக உருவாகும் ‘ஐமா!
புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படமாக அல்லாமல்.புதுமையை விரும்பும் ரசிகர்களுக்கான படமாக உருவாகியுள்ளது. சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் கூட இத்திரைப்படத்தை அனைத்துவிதமான ரசிகர்களும், குறிப்பாக குடும்ப ரசிகர்களும் ரசிக்கும்படி உருவாகியுள்ளது.
ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குநர்
எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ’ஐமா’
துரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ’ஐமா’ திரைப்படம். எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகு. ஆர்.கிருஷ்ணா, தமிழ் மற்றும் மலையாள குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார். ‘ஆருயிரே’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் இவர் ‘ஐமா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்திருக்கும் இப்படத்தில் யூனஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். எல்வின் ஜூலியட் கதாநாயகியாக நடிக்க, அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன், சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கே.ஆர்.ராகும் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அருண்மணியன் பாடல்கள் எழுதியுள்ளார். விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். அஷ்ரப் குருக்கள் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கலை இயக்குநராக ஜீமோன் பணியாற்றியுள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா கூறுகையில், “பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டுவந்துள்ளேன்.படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களை மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது.” என்றார்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.