ரஜினியிடம் பார்த்ததை ரித்துவிடமும் பார்த்தேன்! - ’தக்ஸ்’ நாயகனை பாராட்டிய இயக்குநர் பிருந்தா
இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா, ’ஹே சினாமிகா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தவர் தற்போது ‘தக்ஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முதல் படத்தில் காதல் கதையை இயக்கிய பிரிந்தா, தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை கையில் எடுத்துள்ளார்.
‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக அறிமுக நடிகர் ரித்து ஹரூன் நடித்திருக்கிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா மற்றும் ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முனிஷ்காந்த், இரட்டையர் அருண் - ஆகாஷ், அப்பானி சரத், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு மற்றும் மும்தாஸ்.எம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்க, பிரவீன் அந்தோணி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தக்ஸ்’ திரைப்பட குழுவினர் நேற்று (பிப்.18) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பிருந்தா, “ஒரு நல்ல படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த ஷிபு சாருக்கு நன்றி. இந்த படத்தை தொடங்கும் போது ஹீரோவாக யாரை போடலாம் என்று யோசித்த போது, அவருடைய மகன் ரித்து சரியாக இருப்பாரா? என்று கேட்டார், தயாரிப்பாளரின் மகனா!, என்று யோசித்தேன், பிறகு ரித்துவின் சில வீடியோக்களை காண்பித்தார்கள், அதை பார்த்த பிறகு அவரை நேரில் சந்தித்தேன், அப்போது அவர் கண்ணில் ஒரு பவர் இருந்தது. ரஜினி சார் கண்ணில் பார்த்த அதே பவரை நான் ரித்துவின் கண்களில் பார்த்தேன், அப்போது அவர் தான் ஹீரோ என்று முடிவு செய்துவிட்டேன். அவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் அல்ல நடனத்திலும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் ரித்து பெரிய நடிகராக வருவார், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடத்தில் இருக்கிறது.
இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாபி சிம்ஹா அவருடைய காட்சிகள் முடிந்த பிறகு கூட கேரோவேனுக்கு போகாமல், வெயிலில் உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்பார். ஆர்.கே.சுரேஷின் பவர் படத்திற்கு பலம் சேர்த்தது. முனிஷ்காந்த் அண்ணன், ரித்துவுடன் ரிகல்சருக்கு வந்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜான், சின்ன பொண்ணு தான், ஆனால் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மைக்கில் சொன்னாலே கேட்டு அசத்திவிடுவார், அப்படி ஒரு திறமைசாமி. பல பெரிய படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன் சாருக்கு ஆக்ஷன் சொல்வதற்கு சற்று யோசித்தேன், ஆனால் அவர் தயாரிப்பாளர் எந்த எந்தவித பந்தாவும் இல்லாமல் நடித்தார்.
கைதி படத்தின் இசையை போட்டு தான் காட்சிகளை படமாக்கினேன், அந்த அளவுக்கு சாம் சிஎஸ் இசையில் பவர் இருக்கிறது. அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் என அனைவரும் மிக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய படத்தை முடித்ததற்கு என் உதவி இயக்குநர்கள் முக்கிய காரணம், அவர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக உதவி இயக்குநர் ராம். அவர் இன்று நம்முடன் இல்லை, அவருக்கு இந்த படத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.” என்றார்.
நாயகன் ரித்து ஹரூன் பேசுகையில், “அம்மா இயக்கிய படத்தில் நடித்தது போல் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் நடித்தது இருந்தது. படத்தில் வசனம் குறைவாக தான் இருக்கும், ஆனால் சாம்.சிஎஸின் இசை அதிகம் பேசும். நடிகராக வேண்டும் என்பதற்காக பல முயற்சித்து வருகிறார்கள். ஆனால், எனக்கு இந்த இடம் எளிதாக கிடைத்துவிட்டது, அதற்கு காரணம் என் அப்பா ஷிபு தான், அவருக்கு நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு எளிதாக கிடைத்தாலும், இந்த படத்தில் நான் என் முழுமையான திறயையை வெளிப்படுத்த கடுமையாக உழைத்திருக்கிறேன். நிச்சயம் படமும், என் நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் முதல் படம் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில், “நான் பிருந்தா மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றிய படங்களில் நடித்ததில்லை, முதல் முறையாக அவர் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறேன். மிக திறமையான இயக்குநர். படத்தில் ஒரு டனில் பயணிக்கும் காட்சி இருக்கிறது. அதில் பயணிக்கும் காட்சியை நீளமான காட்சியாக படமாக்கினார்கள், அப்போது மூச்சே முட்டுவது போல் இருக்கும். ஆனால், நாயகன் ரித்து எந்தவித மறுப்பும் இல்லாமல் பல முறை அந்த காட்சியில் கஷ்ட்டப்பட்டு நடித்தார். ஒரு தயாரிப்பாளரின் மகன் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் இயக்குநர் சொல்வதை அப்படியே செய்தார், அதை பார்த்து தான் நானும் அந்த டனல் காட்சியில் நடித்தேன். படத்தில் நடித்த தேனப்பன் சார், ஆர்.கே.சுரேஷ், பாபி சிம்ஹா அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சமைப்போம். மாதத்தில் ஒரு நாள், அனைத்து நண்பர்களும் சேர்ந்து கையில் இருக்கும் பணத்தை போட்டு தான் பிரியாணி சமைப்போம். ஆனால், சமைத்து முடித்த பிறகு அது பிரியாணியாக அல்லாமல் தக்காளி சாதமாக இருக்கும். அப்படி தான் பல படங்கள் எனக்கு அமைகிறது. கதை சொல்லும் போது நன்றாக சொல்வார்கள், ஆனால் அதை படமாக எடுக்கும் போது அவர்கள் சொன்னபடி இருக்காது. இது சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், பிருந்தா மாஸ்டர் என்னிடம் என்ன கதை சொன்னாரோ அதை அப்படியே காட்சியாக எடுத்திருக்கிறார். படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாகவும் விறுவிறுப்பான படமாகவும் வந்திருக்கிறது. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களை வரவேற்று பேசினார்.