கருப்பு வெள்ளை படத்தை ரீமேக் செய்யும் இயக்குநர் கண்ணன்!
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் திரைப்படங்களில் ‘காசேதான் கடவுளடா’ படமும் ஒன்று. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1972 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் தற்போது வரை தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார்.
’ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ உள்ளிட்ட குடும்ப பாங்கான காமெடி திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் கண்ணன், ’பிஸ்கோத்’ படத்தை தொடர்ந்து ‘தள்ளிப் போகதே’ மற்றும் ‘எரியும் கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கி கொண்டிருக்க, தனது 11 வது திரைப்படமாக ‘காசேதான் கடவுளடா’ படத்தை ரீமேக் செய்கிறார்.
முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், மனோரமா பாத்திரத்தில் ஊர்வசி நடிக்கவுள்ளார்கள். நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
படம் குறித்து கூறிய இயக்குநர் கண்ணன், “உண்மையை சொல்லவேண்டும் என்றால் அப்படம் வெளியான போதே, அப்போதைய காலத்தை தாண்டிய முதிர்ச்சி மிகுந்த படைப்பாகத்தான் இருந்தது. எடுத்துக்காட்டாக அப்படத்தில், ATM அறிமுகம் ஆகாத அந்த காலத்தில், ஒரு காட்சியில், பூட்டை திறக்க 4 டிஜிட் கடவு எண் தேவைப்படும். இப்படி காலத்தை விஞ்சிய படைப்பாகவே அப்படம் இருந்தது. ஆதலால் இப்படத்தை இப்போதைய காலகட்டத்திற்கு மாற்றுவதென்பது, அத்தனை கடினமான பணி ஒன்றும் இல்லை. இதிலிருக்கும் மிகப்பெரிய சவால், மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்த அப்படத்திற்கு, நியாயம் செய்யும் வகையில், தற்போதைய படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். எங்கள் குழுவினர் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால் அதுதான் ஆனால் நாங்கள் மிக ஆவலுடன் அப்பணிகளை மேற்கொள்ள காத்திருக்கிறோம்.” என்றார்.
இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி, ஒரே கட்டமாக முழுப்படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.