நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான் - இயக்குநர் கண்ணன் பாராட்டு
மலையாலத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று பல விருதுகளை வென்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை அதே தலைப்பில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். துர்காராம் செளத்ரி மற்றும் நீல் செளத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சுஹாசினி மணிரத்னம் கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார். இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார். மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது, இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது.
எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.
ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார். ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.
இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான்.” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார். இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
வசனகர்த்தா ஜீவிதா பேசுகையில், “இப்படத்தை ஏற்கனவே மலையாளத்தில் பார்த்திருக்கிறேன். சிலர் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்கள் சுதந்திரம் என்றால் ஆடைக் குறைப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள். மலையாள பார்வையாளர்களும், தமிழ் பார்வையாளர்களும் ஒரே மாதிரி அல்ல. இந்த வாய்ப்பை இயக்குநர் ஆர்.கண்ணன் சார் கொடுக்கும்போது என்னால் எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், எனக்கு 3 நாள்தான் கொடுத்தார். பலமுறை பார்த்து எழுதி முடித்து கண்ணன் சாரிடம் கொடுத்தேன். அவர் நினைத்ததை போலவே எழுதியிருந்தேன் என்று கூறினார். மேலும், இன்னொரு வசனகர்த்தாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். கண்ணன் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் மிகச் சிறந்த நிர்வாகி.” என்றார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், “இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.
சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ் குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம். அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படிபட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.
கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள். கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.
நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில் தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.
பள்ளியில் படிக்கும்போது அம்பை என்று எழுத்தாளர். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அந்த கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார். பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.
எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
மேலும், நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கிருதயா, நடிகர் நந்தகுமார், நடிகை கலைராணி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.