Sep 26, 2022 06:18 AM

”சிறிய படங்கள் இல்லை என்றால் சினிமா இல்லை” - இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு

”சிறிய படங்கள் இல்லை என்றால் சினிமா இல்லை” - இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு

சிவரத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரவாளி’. ‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல் கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ஆர்.சித்தார்த் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஷா நைரா நடித்திருக்கிறார். இவர் மும்பையை சேர்ந்த மேடை நாடக கலைஞர் ஆவார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூவிலங்கு மோகன், ரியாஸ் கான், கஞ்சா கருப்பு, பப்லு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள லீ மேஜிக் லெட்டர்ன் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கஸ்தூரிராஜா கலந்துக்கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட, ‘ரவாளி’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரவி ராகுல், “இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டது. நான் ஒரு பெண்ணை சந்தித்தேன், அவர் என்னிடம் கூறிய உண்மை கதைக்கு திரைக்கதை அமைத்து தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். சினிமாவில் நான் சுமார் 30 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். படம் இயக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக அதை செய்யவில்லை. இயக்கம் குறித்த வேலைகளை கற்றுக்கொண்ட பிறகு தான் இந்த படத்தை இயக்கினேன்.

 

இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்துமாறு தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். ஆனால், தேவையில்லாத செலவுகளை செய்ய கூடாது என்பதால் இப்படி எளிமையாக நடத்துகிறோம். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், அவர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். அதற்கு ஏற்றபடி தான் படத்தை இயக்கியிருக்கிறேன்.

 

காதலால் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. இதில் நடித்திருக்கும் சித்தார்த் மற்றும் ஷா நைரா புதுமுகங்களாக இருந்தாலும், சினிமா மீது காட்டும் ஆர்வம் பிரமிக்க வைத்தது. அவர்களுடைய உழைப்பு நிச்சயம் அவர்களை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். சித்தார்த்தை நான் ஏன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தேன், என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவரை நான் ஒப்பந்தம் செய்யும் போது அவருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. என்னை நம்பி நடிக்க வந்தார். ஆனால், இப்போது அவர் தமிழில் பேச கற்றுக்கொண்டிருப்பதோடு, நாம் பேசும் தமிழ் வார்த்தைகள் அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.  அவர் நடித்திருக்கும் இந்த வேடத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரம் வடிவமைக்கப்படிருக்கிறது. அதை புரிந்துக்கொண்டு அவர் நடித்திருக்கிறார். அதேபோல் கதாநாயகியாக நடித்திருக்கும் ஷா நைராவும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார். இவர்களது ஒத்துழைப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

 

கஸ்தூரி ராஜா சார் இந்த விழாவுக்கு வர வேண்டும் என்பது விருப்பம். அவரிடம் சொன்னேன், அவர் வெளியூர் போக வேண்டி இருந்தது. ஆனால், எனக்காக அவரது பயணத்தை ஒத்திவைத்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

 

படத்தில் நடித்த ஜெயபிரகாஷ் சார், கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் வித்தியாசமான காதல் படமாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் கஸ்தூரிராஜா பேசுகையில், “ரவி ராகுல் 30 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார். அவர் சினிமாவை நேசிப்பதால் தான், இன்னமும் இந்த துறையில் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சி வர வேண்டும் என்று அவர் அழைத்த போது, அவருடைய மனம் தெரிந்தது. நான் வந்தால் அவருக்கு ஊக்கமாக இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன் அதனால் தான் என் பயணத்தை ஒத்திவைத்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

 

தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும், என்று ரவி ராகுல் கூறினார். உண்மை தான் நானும் அப்படி தான் யோசிப்பேன். தயாரிப்பாளர்கள் தான் முக்கியம். இன்று பல தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களுக்காக பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி, கமல், சிம்பு, தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் தேதிக்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி பெரிய நடிகர்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், அந்த இடைப்பட்ட காலத்தில் சிறிய படங்களை ஏன் தயாரிக்க கூடாது?, புதுமுகங்களை வைத்து படங்கள் தயாரிக்கலாமே. சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதுமுகங்களாக தானே அறிமுகமானார்கள். ‘துள்ளுவதோ இளமை’ என்ற சிறிய படம் மூலம் தான் தனுஷ் கிடைத்தார். 

 

இன்று சினிமா வாழ்ந்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் சிறிய படங்கள் தான். சிறிய படங்கள் இல்லை என்றால் சினிமாவே காணாமல் போயிருக்கும். இந்த ரவாளி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தபோது நிச்சயம் படத்தில் ஏதோ வித்தியாசமான விஷயத்தை ரவி ராகுல் சொல்லியிருப்பது தெரிகிறது. படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் இறுதியில் இயக்குநர் கஸ்தூரி ராஜா தான் எழுதிய ’பாமர இலக்கியம்’ என்ற புத்தகத்தை ‘ரவாளி’ படக்குழுவினருக்கு வழங்கினார்.