இயக்குநர் கே.வி.ஆனந்த் மரணம்!
பிரபல ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குநருமான கே.வி.ஆனந்த் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
பத்திரிகைத்துறையில் புகைப்பட நிருபராக தனது பணியை தொடங்கிய கே.வி.ஆனந்த், பிறகு பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், மோகான்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ’தென்மாவின் கொம்பத்’ என்ற மலையாள திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், தமிழில் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ‘முதல்வன்’, ‘சிவாஜி’ என பல பிரம்மாண்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அப்படத்தை தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ’மாற்றான்’, ‘அநேகன்’, ‘கவன்’, ‘காப்பான்’ ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த கே.வி.ஆனந்த், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.