Nov 29, 2023 04:56 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நிறுவனம் வழங்கும் முதல் படம்! - முதல் பார்வை போஸ்டர் வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நிறுவனம் வழங்கும் முதல் படம்! - முதல் பார்வை போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தனது புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அந்நிறுவனம் மூலம் தனது நண்பர்கள் மற்றும் தனது உதவியாளர்களின் படங்களை தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தனது முதல் திரைப்படத்தின் அறிவிப்பை, அப்படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. ’ஃபைட் கிளப்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்க, ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்குகிறது.

 

இப்படத்தில் ‘உறியடி’ புகழ் நடிகரும் இயக்குநருமான விஜய் குமார்  முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக மோனிஷா மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி எழுத, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் - அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக நாயகன் விஜய் குமார் பணியாற்றியுள்ளார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதாநாயகனான விஜய் குமாரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

 

Fight Club First Look Poster

 

இதனிடையே இப்படத்தினை நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர் சொந்தமாக தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக வழங்குகிறார் என்பதும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'ஃபைட் கிளப்'புடன் கரம் கோர்த்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.