”உறவு முறைகளை பேசும் படங்களை இயக்க இயக்குநர்கள் முன் வரவேண்டும்” - இயக்குநர் முத்தையா
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘விருமன்’ படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் முத்தையா பேசுகையில், “எனக்கு மேடையில் பேச வராது, இன்று நடக்கும் இந்த விழாவின் மேடை மிக முக்கியமானது. கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் என எந்த படத்திற்கும் இது வரை இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு மட்டுமே நடந்துள்ளது.
இசை வெளியீட்டு விழா நடந்தால் எனது பெற்றோர்களை அழைத்து வர ஆசைப்பட்டேன். நாம் நேசித்த தொழிலில் வெற்றி பெறுவது என்பது சிறந்த விஷயம். அது தனி சந்தோஷமும் கூட. அந்த சந்தோஷமான தருணத்தில் நம் பெற்றோரை அழைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரவேண்டும் என்று நினைத்தேன். அது இன்று நான் பிறந்த மண்ணில், நான் படித்த ஊரில் மிக பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியில் அவர்களை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.
பாரதிராஜா சார் அவர் தான் எப்போதுமே ஏகலைவன். நாமளும் படம் எடுக்கலாம். நாம் பார்த்த நம் மண்ணையும் மக்களையும் வைத்து படம் எடுக்கலாம் என்பதற்கு அவர் தான் எனக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவரின் முன்னிலையிலும்.
ஷங்கர் சாரின் முன்னிலையிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பது மிக சந்தோஷமாக உள்ளது.
இவ்வளவு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யா சாருக்கும், கார்த்தி சாருக்கும் ராஜா அண்ணனுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சூர்யா சாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். இந்த மேடையில் நான் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு காரணம் யுவன் சார். நிறைய சிறப்பான விஷயங்கள் என் படத்தில் உள்ளன, அதிதி இப்படத்தில் அறிமுகம் ஆகிறார்கள். கார்த்தி சார் என்னிடம் நாம் இருவரும் இணைந்து இரண்டாவதாக ஒரு படம் பண்ணுவோம் என்றார். கார்த்தி சார் இது வரை மணிரத்னம் சாருடன் இணைந்து தான் 3 படம் நடித்துள்ளர். அதே போல் என்னுடன் இரண்டாவது படத்தில் இணைந்தது மிக சந்தோஷமாக உள்ளது.
என் தந்தை பெயர் முருகேசன், டீ கடை வைத்திருந்தார். காலை 2 மணிக்கு எழுந்திருப்பார். இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவார். அப்பாவின் உழைப்பு போன்று வேறேதுவும் இல்லை. என் தந்தைக்கு படிப்பை விட ஒழுக்கம் தான் முக்கியம். அதை தான் நானும் பின் பற்றி வருகிறேன். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதனால்.
என் தாய் பழனி, அவர் ஏதும் அறியாத ஒரு சராசரி பெண். பழனி என்ற மூன்றெழுத்து பெயரை தவிர வேறு எதுவும் தெரியாத வெள்ளந்தியான கிராமத்துப் பெண் அவர். என் தந்தையை அவர் திருமணம் செய்யும் போது அவருக்கு 12 வயது. அப்பாவிற்கு 20 வயது. விவரம் தெரியாத அந்த வயதிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கள் 9 பெயரை வளர்த்தார். எங்களுக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான அனைத்தையும் டீ கடையில் உழைத்து எங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் வளர்த்தார்கள்.
நாங்கள் ஒரு கூட்டுக் குடும்பமாக வளர்ந்ததால் தான் உறவு முறையான படங்களை இயக்குகிறேன். நகரத்தை பற்றி படம் எடுக்க பல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால், மண் சார்ந்து, மரபு சார்ந்து பண்பாடு சார்ந்து உறவு முறையை சொல்லக் கூடிய படங்கள் மிக குறைவாக தான் வெளியாகின்றன. 90க்கு முந்தைய காலத்தில் அது போன்ற படங்கள் தான் அதிகமாக இருந்தது. அதனால் தான் தவறுகள் கொஞ்சம் குறைவாக இருந்தது என்று நான் நம்புகிறேன்.
உறவு முறைகளை பேசும்படியான படங்களை இயக்க இயக்குனர்கள் முன் வரவேண்டும். ஒருவன் தவறு செய்வதே உறவுக்காக தான். நான் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையோடு தான் 550 கிலோமீட்டர் பயணித்து சென்னை வருவேன். அப்போது என் தந்தை “லட்சத்தில் ஒருவன் ஜெயிக்கும் தொழில் அது, உன்னால் எப்படி முடியும்” என்பார். ஆனால், எனக்குள் ஒரு வெறி மட்டும் இருந்தது. நம்பிக்கையோடு சென்றேன். மண் வாசனை, முதல் மரியாதை போன்ற படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு பயமில்லை. அதே போல் இன்று ஜெயித்து என் பெற்றோரை அறிமுகம் செய்துவிட்டேன்.
94 காலகட்டத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தை நம்பி சினிமாவுக்கு வந்தேன். அதே போல், இசைக்கு இளையராஜாவை நம்பினேன். ஆனால், 96ல் யுவன் அறிமுகம் பின்பு யுவன் இசையில் ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டேன். இன்று தான் நடந்தது. குட்டிப்புலி படத்திற்கு யுவன் சார் ஒப்புக் கொள்ளவில்லை. கொம்பன் படத்திற்கு அவரிடம் போதிய காலம் இல்லை. இப்போது விருமன் படத்திற்க்கு கார்த்தி சாரிடம் கேட்டேன். அவரின் முயற்சியில் தான் யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய கார்த்தி சாருக்கு நன்றி.
கஞ்சாப்பூ கண்ணால பாடலை எழுதி கிட்டத்தட்ட 5 வருடங்களாகின்றன. அதற்கான அங்கீகாரம் இப்போது தான் கிடைத்துள்ளது. அதற்கு யுவனின் இசை தான் காரணம். பாடல்கள் அனைத்தையும் சிறப்பாக அமைத்துள்ளார்.
அதிதிக்கு நன்றி, அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மரியாதையான பெண் அவர், அனைவருக்கும் மரியாதை கொடுத்தார். இப்படி மரியாதையான ஒரு பெண்ணை வளர்த்ததற்கு ஷங்கர் சாருக்கு நன்றி.” என்றார்.