நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள்
நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம், என்று நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சார்பில், பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிலவேம்பு கசாயம் குடுப்பதால் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, ஆராய்ச்சியில் நிலவேம்பு பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியும் வரை அதை விநியோகம் செய்ய வேண்டாம், என நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.