"தம்பி மிஷ்கின் தயவு செய்து உங்கள் நாவை அடக்குங்கள்” - ’எமன் கட்டளை’ இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில், வி.சுப்பையன் கதை, வசனத்தில், எஸ்.ராஜசேகர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘எமன் கட்டளை’. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக சந்திரிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜூனன், ஆர்.சுந்தராஜன், சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், மதன் பாப், பவர் ஸ்டார் சீனிவாசன், மதுமிதா, அனுமோகன், பாண்டு, சிசர் மனோகர், டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, கராத்தே ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.கே இசையமைத்துள்ளார். சினேகன் பாடல்கள் எழுதியிருக்கிறார். ராதிகா, சிவராக் சங்கர், ஜாய்மதி, அபிநயஸ்ரீ ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஏகாம்பரம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பத்திரிகையாளர் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜனவரி 25 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகர்ன, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ விருகை ரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூனன் பேசுகையில், “’எமன் கட்டளை’ படத்தின் இயக்குநர் என்னுடைய கல்லூரி சீனியர், ஒரே பஸ் ரூட். அதில் இருந்தே எங்கள் பயணம் தொடங்கியது, இன்று முதல் போய்ட்டு இருக்கு. ஒரு நாள் நான் படம் பண்றேன் வா, என்றார். கதை என்னவென்று எனக்கு தெரியாது, நடித்துக் கொடுத்துவிட்டேன். அவர் அடுத்தடுத்து பண்ணும் படங்களில் என்னை நடிக்க வைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் எனக்கு மற்றொரு நண்பர் கிடைத்தார், அவர் தான் அன்பு. அவர் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அவர் யாருடைய மகன், உதவி செய்யாமல் எப்படி?,எனக்கு பெரும் ஒத்துழைப்பாக இருந்தார். டிபி கஜேந்திரன் சார், டெல்லி கணேஷ் சார் ஆகியோருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்ந்த இயக்குநருக்கு நன்றி, படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.” என்றார்.
நடிகர் வையாபுரி பேசுகையில், “இசையமைப்பாளர் ரொம்ப அழகா பாடல் போட்டு இருந்தார், வரிகள் எதார்த்தமாக இருந்தது. மத்தவங்க பேசட்டும் என்று இங்கு அமைதியாக இருக்கிறார். இயக்குநருடைய அப்பாவும், அவரும் எப்படி பழகி இருப்பார்கள், என்பது அவரது முகத்தில் தெரிந்தது. மயிலா...என்று அன்பாக அழைக்கக் கூடிய மயில்சாமி இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், திரைப்படங்கள் மூலம் எப்போதும் நம்முடன் இருப்பார். நானும், மயிலாவும், அன்பும் குடும்ப நண்பர்கள், குழந்தையில் இருந்து அன்பை எனக்குத் தெரியும். ஒவ்வொரு படம் வரும்போதும் தம்பி வந்துடுவான், என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால், இந்த படத்தில் தம்பி அறிமுகமானது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் எப்படி சந்தோஷப்படுவாரோ, அதுபோல் நான் அவரது அறிமுகத்தை பார்த்து சின்ன அப்பாவாக பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் அன்பு நிறைய விசயங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் ராஜசேகர், மிக விரைவாக படத்தை முடித்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், அவர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் ஆசியுடன் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த படத்தை தயாரித்திருக்கும் கார்த்திகேயன் சார், பல பள்ளிகளை நடத்துகிறார். இந்த படத்தின் மூலம் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கதாநாயகி, அர்ஜூனன் என அனைவருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
படத்தின் இயக்குநர் எஸ்.ராஜசேகர் பேசுகையில், “சின்ன விபத்து, அதனால் எனக்கு அடிப்பட்டு இருக்கு. நான் இந்த படத்தில் இணையும் போது, அப்பா படம் பண்ணலாம் என்று சொன்ன போது, கார்த்திகேயன் சார், நான் பண்றேன் என்று கூறி உள்ளே வந்தார், அவருக்கு என் முதல் நன்றி. இரண்டாவது என்னுடைய ஜூனியர் நடிகர் அர்ஜூனன். அவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் இருந்தே தெரியும். பிறகு அன்பு, நாயகி சந்திரிகா என நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக பழகினோம். அதனால் எங்களுக்கு ஒரு படம் போலவே தெரியாது. காமெடி டிராமாவை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறோம். நிச்சயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் வந்திருக்கிறது. நிச்சயம் படம் நல்ல வரவேற்பை பெறும், நன்றி.” என்றார்.
கதாநாயகி சந்திரிகா பேசுகையில், “ஊடகம், பத்திரிகையாளர்களுக்கு முதல் நன்றி, அவர்கள் தான் எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் ராஜசேகர் சாருக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது. உப்பு திண்ணவன் தண்ணீர் குடிச்சாகனும், என்ற கான்சப்ட்டை வைத்து படம் பண்ணியிருக்கார். இந்த படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் அவர்கள் வீட்டு பெண்ணாக பார்த்து எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அவர்களுக்கு நன்றி. அர்ஜூனன் அண்ணா எனக்கு நிறைய விசயங்கள் சொல்லிக் கொடுத்தார். அன்புவின் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இங்கு விருது வாங்க காத்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இரண்டு மணி நேரம் முழுக்க முழுக்க காமெடியாக படம் இருக்கும். நாயகன், நாயகி, நண்பர் வேடம் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் எல்.சுரேஷ் பேசுகையில், ”இந்த படத்தின் இசையமைப்பாளர் எனது நண்பர். மக்கள் தொடர்பாளர் வெங்கட் எனது நண்பர். இசையமைப்பாளர் என்.எஸ்.கே எனக்கு 25 வருடங்களாக தெரியும், அப்போதில் இருந்தே இசையமைப்பாளராக வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமூகத்திற்காக அவர் நிறைய தனிப்பாடல்களை இசையமைத்துள்ளார். அதை நான் கேட்டிருக்கிறேன், அனைத்தும் சிறப்பாக இருக்கும். இந்த படத்திற்காக நான்கு பாடல்கள் போட்டிருக்கிறார், அவை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அவருக்கு நிச்சயம் பெரிய எதிர்காலம் உண்டு. படத்தின் நாயகன் அன்பு, மயில்சாமி சாரின் மகன். அவரை பார்க்கும் போது எனக்கு மயில்சாமி சாரின் ஞாபகமும், எத்தன் பட ஞாபகமும் தான் வருகிறது. அந்த பத்தில் நடிக்கும் போது மயில்சாமி சார் அவரது சொந்த பணத்தில் அனைவருக்கும் சமைத்து போடுவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எனவே, மயில்சாமி சார் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியம் அன்புவை பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நினைக்கிறேன். ஒரு கதாநாயகனுக்கு உண்டான அத்தனை முக லட்சனங்கள் கொண்டவராக அவர் இருக்கிறார். இத்தனை வருடங்களாக அவர் ஏன் இன்னும் வெளிப்படவில்லை, என்று தோன்றுகிறது. அவர் நிச்சயம் பெரிய ஆளாக வருவார், என்று நினைக்கிறேன். அவரை வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் எங்க ஊரைச் சேர்ந்தவர். அவரும் கும்பகோணம், நானும் கும்பகோணம். மக்களிடையே இருக்கும் பற்றில் முதன்மையானது ஊர் பற்று தான். நான் சென்னை வந்த புதிதில், கும்பகோணத்திற்குப் போகும் பஸ்ஸை பார்த்தாலே அப்படியே நின்றுவிடுவேன், அந்த அளவுக்கு ஊர் மீது பற்று இருக்கும். அந்த வகையில், தயாரிப்பாளர் கும்பகோணம் என்று சொல்லும் போது அவர் மீது எனக்கு தனி பற்று வந்துவிட்டது. அதேபோல், அவரது மகளுக்காக அவர் ஒரு படத்தை தயாரித்தார், என்று கேட்ட போது அவர் மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது. தந்தையின் ஆசைக்காக இந்த படம் உருவாகியிருக்கிறது. இயக்குநரின் தந்தையும் இல்லை. தயாரிப்பாளர் மற்றும் நாயகனின் தந்தையும் இல்லை. அவர்களின் ஆசீயுடன் இந்த படம் பெரிய வெற்றியடையும் என்று நான் நம்புகிறேன்.
மற்றொரு விசயத்தை பற்றி பேசப்போகிறேன். இதற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், திரைத்துறைக்கு சம்மந்தம் இருக்கிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஊரில் இருந்து போன் செய்தார், போன் எடுத்து என்னவென்று கேட்டால், இளையராஜா எவ்வளவு பெரிய ஆள், அவரைப்பற்றி ஒருத்தன் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு இருக்கான், நீங்க அங்கே என்ன பண்றீங்க, என்று கேட்டார். அவர் பேசுனா நான் என்ன பண்றது, என்றால், நீயும் சினிமாவில் தானே இருக்க இதையெல்லம் கேட்க மாட்டியா?, என்று கேட்கிறான். இது எப்படி இருக்கு என்றால், ஒரு பொது மேடையில் இயக்குநர் மிஷ்கின் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு சென்று விட்டார். ஆனால், அவரால் சினிமாவில் இருக்கும் அனைவரும் அப்படித்தான், என்ற பிம்பம் உருவாகி விட்டது. மிஷ்கினுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மிஷ்கின் ஒரு மேடையில் பேசிட்டு போகிறார். அந்த மேடையில் அமீர் மற்றும் வெற்றிமாறன் இருக்கிறார்கள். அவர் நகைச்சுவையாக பேசுவதற்கு அவர்கள் சிரித்தார்கள். இப்போது எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்றால், அவர் பேசும் ஆபாச பேச்சுக்கு அவர்கள் சிரித்தது போல் ஆகிவிட்டது. அதேபோல், அமீர் இதற்கு விளக்கம் கொடுத்தார். இங்கு தவறாக பேசுவது மிஷ்கின், வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது. மிஷ்கின் என்ற ஒரு நபர், எந்த இசை வெளியீட்டுக்கு வந்தாலும், ஒரு முடிவோடு தான் வருகிறார். இன்று யாரை திட்டலாம், என்ற என்னத்தில் தான் அவர் வருகிறார். அவரை விட அதிக வயதுடையவர்களை கூட, வாடா போடா என்று பேசுகிறார். மிஷ்கினின் படைப்புகள் மிகச்சிறந்த படைப்புகள். ஆனால், அதில் எடுத்த நல்ல பெயரை, மேடை பேச்சின் மூலம் ஏன் கெடுத்துக் கொள்கிறார். மேடையில் இருப்பவர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறார். உலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் படித்து, அன்பை போதித்தேன், என்று மிஷ்கின் பேசுகிறார். ஆனால், திருக்குறள் படித்தரா? உலகமே வணங்கும் ஒரு புத்தகம் திருக்குறள். அதைப் போல தான் இளையராஜா. அவர் பேரரசுக்கு மேல், அவர் இன்று இல்லை என்றால் சேனல் இல்லை, எப்.எம். இல்லை. அவர் உனக்கு சைடிசா?, அவரை இப்படி தான் பேசுவீங்களா?. அதேபோல் கொட்டுக்காளி படத்தின் விழாவிலும் இப்படி தான் அசிங்கமாக பேசினார். அவர் மேடையில் பேசுவதை அனைவரும் கவனிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு தான் பேசுகிறார். எனவே, மிஷ்கின் இனி எந்த இடத்திலும் பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவர் இப்படி பேசிட்டு போய்விடுவார், ஆனால் அந்த பிரச்சனை அனைத்து சினிமாக்காரர்களையும் பாதிக்கிறது. அவர் இப்படி பேச வேண்டும் என்று வீட்டில் இருந்தே தயாரித்து தான் பேசுகிறார். இவை எல்லாம் விளம்பரத்திற்காக தான் . அவர் படம் எடுத்தே பிரபலமடைந்து விட்டாரே பிறகு ஏன் இப்படி ஆபாசமாக பேசி விளம்பரம் தேடுகிறார். அடிப்படை நாகரீகம் தெரியவில்லை என்பதால் அவர் எனக்கு தம்பி தான். எனவே, தம்பி மிஷ்கின் தயவு செய்து உங்கள் நாவை அடக்குங்கள், இனி எந்த மேடையிலும் இப்படி பேசாதீர்கள், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி பேசுகையில், “எமன் கட்டளை படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே தனது மகளுக்காக ஒரு படத்தை தயாரித்திருந்தார், அதற்காகவே அவரை பாராட்டலாம். திறமைசாலிகளை கண்டுபிடித்து கொண்டு வருகிறார். இந்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மீடியாக்கள் இருக்கிறது. மீடியாக்கள் பெரிய படங்களை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்காமல், சிறிய படங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த படங்கள் மூலம் தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் நன்றாக இருப்பார்கள். நாயகன் அன்பு, முதல் படம் போல் இல்லாமல், நடனம் நன்றாக ஆடினார். நாயகி சந்திரிகாவும் அவருக்கு நன்றாக ஒத்துழைத்து நடனம் ஆடியிருந்தார். தமிழ் பேசத்தெரிந்த நாயகியை கண்டுபிடித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. ஆண்டவன் கட்டளையிட்டால் தான் ‘எமன் கட்டளை’ சக்சஸ் ஆகும் என்று சொன்னார்கள். அதனால் இந்த படத்திற்கு ஆதரவளித்து வெற்றியடையச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
படத்தின் நாயகன் அன்பு பேசுகையில், “இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருக்கும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் இல்லை என்றால் இந்த படம் இல்லை, அவருக்கு நன்றி. இந்த படத்திற்காக என்னை அழைத்த போது, அப்பா - மகன் என்று இருந்தார்கள், அதுவே எனக்கு பிடித்து விட்டது. அப்பா கதை, மகன் இயக்குநர் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு அர்ஜூனனை சந்தித்தேன், ஓகே என்று சொல்லிவிட்டேன். பிறகு படப்பிடிப்புக்கு சென்ற போது முதல் நாளில் நான் கேமராமேன் கார்த்திக்ராஜா சாரை சந்தித்தேன். அவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்பா - மகன் என்று தொடங்கி இப்போது மயில்சாமி - அன்பு என்று வந்து நிற்கிறேன், என்றார். அவர் எனக்கு நிறைய விசயங்கள் சொல்வார். சிங்கிள் டேக் என்ற ஒரு ஃபார்மட் அவர் வைத்திருப்பார், ஆனால் இங்கு அவரது ஃபார்மட் உடைந்துவிட்டது. ஒரு நாள் அவரே டென்ஷனாகி விட்டார். பிறகு அவர் சொல்வதை கேட்டு கேட்டு நடித்தோம். படம் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ஒரே காமெடியாக இருக்கும். ஆர்.சுந்தராஜன் சார், டெல்லி கணேஷ் சார் என பல ஜாம்பவான்களுடன் நடித்தது மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் போனது. அடுத்த மாதம் படம் வெளியாகிறது. உங்களது ஆதரவு வேண்டும். ஆதரவு இல்லாமல் எதுவும் நடக்காது, எனவே உங்களுடைய ஆதரவு, ஆசி வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “எமன் கட்டளை இது இறைவன் கட்டளை, நிச்சயம் பெரிய வெற்றி பெறும். நாயகன் அன்புவின் நடனத்தை பார்க்கும் போது கமல் சார் ஞாபகம் வந்தது. அவர் நிச்சயம் பெரிய இடத்துக்கு போவார். தமிழ்நாட்டில் தமிழ் ஹீரோ. இங்கு அது தான் பிரச்சனை. தமிழ்நாட்டில் தமிழன் வரக்கூடாது, என்ற நிலை தான் இருக்கிறது. அவற்றை மீறி அன்பு பெரிய இடத்துக்குப் போவார். இசையமைப்பாளர் நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பள்ளி நடத்துகிறார் என்றார்கள், அவரது மகளுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறார், என்று சொன்னார்கள். இன்று மக்களுக்காக படம் எடுத்திருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். கதாநாயகியை பார்க்கும் போது, பிரபல நடிகையை பார்த்தது போல் இருக்கிறது, அவரும் அந்த நிலைக்கு வர வேண்டும். அர்ஜூனன், கொட்டாச்சி என அனைவருக்கும் வாழ்த்துகள். சினேகன் சார் சிறப்பாக பாடல்கள் எழுதியிருக்கிறார். மயில்சாமியும், நானும் 1983-ல் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். நான் படம் பண்ணும் போது, அவரே கேட்டு நடித்துக் கொடுத்தார். நல்லவர்களை இறைவன் சீக்கிரமாக கூப்பிட்டுக் கொள்வார். இந்த படம் மிகப் பெரிய வெற்றியடைய நான் வணங்கும் சித்த பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன். தயாரிப்பாளர் கார்த்திகேயன் தொடர்ந்து பல நல்ல படங்களை எடுக்க வேண்டும். இன்று போதைக்கு அடிமையாகி பல குற்றங்களை செய்கிறார்கள், அந்த நிலை மாறுவதற்காக நாம் படம் எடுக்க வேண்டும். நான் படம் எடுத்தால் அதில் மது குடிப்பது போன்ற காட்சிகள் வைக்கவே மாட்டேன். அதேபோல் நடித்தாலும், அதுபோன்ற காட்சிகளை நிராகரித்து விடுவேன். காரணம், நான் எம்.ஜி.ஆரிடம் இருந்தேன், அதில் இருந்து தான் நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டேன். இருக்கும் வரை நல்லதே செய்வோம், நல்லதை பேசுவோம். எமன் கட்டளை மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசுகையில், “இங்கு மயில்சாமி இருக்க வேண்டியது, ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. வையாபுரி சொன்னது போல் அவர் இல்லை என்றாலும், அன்புக்கு இங்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள். என் மனதில் ஓடுவது அன்பு தான். ஒரு ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. அவரிடமும் அதை தான் சொன்னேன். அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டு, உடலை நன்றாக வைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். இசையமைப்பாளர் சசிகுமார் பேச முடியாமல் திணறினார். அதற்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியும். அவரது போராட்டம் சாதாரணமானது அல்ல. 40 வருடங்களாக சினிமாவில் நாங்கள் நின்றுக்கொண்டிருக்கிறோம். பலர் காணாமல் போய்விட்டார்கள். அதற்கு காரணம் சரியான கணிப்பு இல்லாதது தான். அர்ஜூனன் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். அவரது ரியாக்ஷன் நன்றாக இருக்கிறது. சினிமாவில் திறமை இருந்தால் போதும், ஜெயித்து விடலாம். என்னதான் படம் எடுத்தாலும், என்ன தான் கஷ்ட்டப்பட்டாலும் ரிலீஸ் என்பது பெரிய சிக்கலான ஒன்று. விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் என்பதால், எந்த படங்கள் ஓடுகிறது என்பது எனக்கு தெரியும். அந்த வகையில், குடும்பஸ்தன் படம் கொஞ்சம் நன்றாக ஓடுகிறது. மற்ற படங்கள் சொல்லும்படியாக இல்லை. அதனால், நிறைய திரையரங்குகளில் படங்களை போடுவது தவறானது. குறைவான தியேட்டர்கள் போட்டால் போதும், படம் நன்றாக இருந்தால் தியேட்டர் தானாக அதிகரிக்கும். அதனால் மற்றவர்களை குறை சொல்வதை விட்டு விடுங்கள், நல்ல படங்களாக இருந்தால் நிச்சயம் ஓடும். படம் நன்றாக இருந்தால் தான் மக்கள் வருவார்கள், அப்போது தான் தியேட்டர் கிடைக்கும். அதை விட்டுவிட்டு தியேட்டர் உரிமையாளரை குறை சொல்லக் கூடாது. இதை எல்லாம் புரிந்துக்கொண்டு, நேரம் காலம் பார்த்துவிட்டு, சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும். பத்து லட்சம், ஐந்து லட்சம் போட்டு படத்தை எடுக்கிறார்கள், யார் யாரோ ஹீரோவாக நடிக்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர் ஹீரோவாக நடித்துவிட்டு, அதற்கு தியேட்டர் கேட்கிறார்கள். 15 லட்சத்தில் ஒரு படத்தை எடுத்துவிட்டு, ஒரு கோடி என்கிறார்கள், இப்படிப்பட்ட படங்கள் ஓடவில்லை என்றால், எப்படி ஓடும். அதனால், சரியான கதையை தரமாக எடுத்தால், நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில், ‘எமன் கட்டளை’ தரமான, சிறப்பான படமாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன், நன்றி.” என்றார்.