’இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும் - நடிகர் ஜெயம் ரவி நம்பிக்கை

இயக்குநர் ஐ.அகமது இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘இறைவன்’. பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ‘இறைவன்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். 'எம். குமரன்' படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். 'இறைவன்' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில் தான் படம் தொடங்கியது. கோவிட் காரணமாக 'ஜனகனமண' நின்றது. அதன் பின்பு தான் 'இறைவன்' தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவி தான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வந்ததற்கு நன்றி. வினோத் சாரின் படங்கள் இண்டஸ்ட்ரியை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அகமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும். விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பா தான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன் 2' பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம் தான். 'இறைவன்' படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
இயக்குநர் அகமது பேசுகையில், ”நிகழ்விற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. 'மனிதன்' படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ரவியுடன் இதற்கு முன்பு 'ஜனகனமண' ஆரம்பித்தோம். ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. அதனால்தான் 'இறைவன்' படமே வந்துள்ளது. இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். எனக்கே இந்தக் கதை சவாலாகதான் இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நயன்தாராவுக்கு இந்தக் கதையை 4 நிமிடங்கள்தான் ஃபோனில் சொன்னேன். உடனே சம்மதம் சொன்னார். அவருக்கு நன்றி. யுவனும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக்கு வந்துள்ள விஜய் சேதுபதி சாருக்கும் நன்றி. இயக்குநர் வினோத்தின் படங்களுக்கு நான் ரசிகன். 'இறைவன்' படத்திற்கு உங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.
இயக்குநர் அ.வினோத் பேசுகையில், ”படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படத்திற்காக காத்திருக்கிறேன். ஜெயம் ரவி சார் நெகடிவ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும். ஆல் தி பெஸ்ட்” என்றார்.
எடிட்டர் மணிகண்ட பாலாஜி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. திரில்லர் ஜானரில் படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
கலை இயக்குநர் ஜாக்கி பேசுகையில், ”நான் பயந்த சுபாவம் என்பதால் திரில்லர் ஜானரில் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால், அப்படியான ஒரு படத்தில் என்னை இயக்குநர் வேலை செய்ய வைத்திருக்கிறார். அவருடன் அடுத்தடுத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. படத்திற்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் நரேன் பேசுகையில், ”போலீஸ் கதாபாத்திரம் அடிக்கடி எனக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு காரணமான என் நண்பர்கள் அகமது சார், ஜெயம் ரவிக்கு நன்றி. இந்தப் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. 'அஞ்சாதே' படத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோவிற்கும் நன்றி” என்றார்.
நடிகர் அழகம் பெருமாள் பேசுகையில், ”’இறைவன்’ படத்தை தயாரித்திருக்கும் சுதனுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அவருக்கு மட்டுமல்ல இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.
நடிகை விஜயலட்சுமி பேசுகையில், ”சர்வைவர் நிகழ்ச்சி முடித்த பின்பு எனக்கு கிடைத்த நல்ல படம் 'இறைவன்'. ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என இயக்குநர் அகமது என்னிடம் சொன்னார். அவரின் நம்பிக்கைக்கு நன்றி. நயன்தாராவுடன் காம்பினேஷன் கிடைத்தது மகிழ்ச்சி. ஜெயம் ரவி என் பக்கத்து வீடுதான். இந்தப் படம் மூலம் அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சியான அனுபவம் கொடுத்த இந்தப் படத்திற்கு நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் அகமது கடின உழைப்பாளி. இங்கு வந்திருக்கும் ஜெயம் ரவி, விஜய்சேதுபதி இரண்டு பேரும் சம்பளம் குறித்து கவலைப்படாமல் கதை, இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள். படத்திற்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.