’டிமான்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! - திகில் பட ரசிகர்களுக்கு காத்திருக்கும் புதிய அனுபவம்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வித்தியாசமான திகில் படமாக உருவாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னமும் அப்படத்திற்கு என்று தனி ரசிகர் வட்டமே இருக்கிறது. இப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே இயக்குநர் அஜய் ஞானமுத்து ’டிமான்டி காலனி 2’ படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் அப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ’டிமான்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்திருப்பதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், மீண்டும் அருள் நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார்.
ஒயிட் லைட்ஸ் எண்டர்டெயின்மெட் மற்றும் ஞானமுத்து பட்டறை நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக போஸ்டர் க்யூ ஆர் கோடு முறையில் வெளியிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது என்பதும் , விரைவில் இப்படத்தின் அறிவிப்புகளும் வித்தியாசமான முறையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.