இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘காந்தாரி’ பட டிரைலர்!

வருடத்திற்கு இரண்டு அல்லது ஒரு படமாவது இயக்கிவிடும் இயக்குநர்களின் பட்டியலில் இருக்கும் இயக்குநர் ஆர்.கண்ணன், தற்போது இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பயணிக்கிறார். அந்த வகையில், தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்து இயக்கும் படம் ‘காந்தாரி’. கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா முதன்மைவேடத்தில் நடிப்பதோடு, முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் கதையை தொல்காப்பியன் எழுத, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார். ஸ்ரீனி வசனம் எழுத, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.வி.கணேஷ் முத்து இசையமைக்க, ஜிஜிந்த்ரா படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரனும், மக்கள் தொடர்பு பணியை ஜான்சனும் கவனிக்கிறார்கள்.
இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையில் உள்ள பொக்கிஷங்களைத் தேடிச் செல்கிறார். அவர் அங்கே எதிர்கொள்ளும் பல ஆபத்துக்களையும், ஆச்சரியங்களையும் பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில் சொல்வதோடு, ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன், படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குநர் மணிரத்னம் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மெட்ரோ ஷிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.