”மக்களை சந்தோஷப்படுத்தும் படங்களுக்கு விருது கொடுங்க” - இயக்குநர் ராம்பாலா
‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’ என தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘இடியட்’. இம்முறையும் காமெடி கலந்த திகில் கதையை கையில் எடுத்தியிருக்கும் இயக்குநர் ராம்பாலா, தனது வித்தியாசமான கருவோடு, மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கப் போவது உறுதி.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நாயகன், நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், இயக்குநர் ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து, ஊர்வசி, அக்ஷரா கவுடா உள்ளிட்ட பல முன்னணின் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாயகன் மிர்ச்சி சிவா, நாயகி நிக்கி கல்ராணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம்பாலா, “எல்லோரும் எப்போதாவது ஒரு முறையாவது முட்டாள்தனமாக நடந்துகொள்வது இயல்பு. அப்படி நடந்துக் கொள்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் ‘இடியட்’. மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் ஜனரஞ்சகமாக குழந்தைகளோடு பார்க்க கூடிய பேய் படமாக இப்படம் இருக்கும்.
பொதுவாக சாதியை பற்றி பேசுவதும், கத்தியோடு வருவது போன்ற திரைப்படங்கள் தான் அதிகரித்துள்ளது. ஆனால், அப்படிப்பட்ட படம் எடுக்காமல் மக்களை சந்தோஷப்படுத்தும் படங்கள் எடுப்பது தான் என் நோக்கம். கத்தியோடு வரும் படங்களுக்கு தான் விருது வழங்கினார்கள். ஆனால், மக்களை சந்தோஷப்படுத்தும் படங்களுக்கு தான் விருது வழங்க வேண்டும். அதற்காக மத்திய அரசு தனியாக விருது கமிட்டி கூட ஆரம்பிக்கலாம்.” என்று தெரிவித்தார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், “ராம்பாலா சாரின் எழுத்து திறமை அபாரமானது. அவர் பாக்யராஜ் சார் பள்ளியில் இருந்து வந்தார். அவர்களுக்கான சிறப்பு தகுதி அவரிடம் உள்ளது. அவருடைய அனுபவத்திற்கும் திறமைக்கும் அவர் இந்நேரம் 25 படங்கள் இயக்கியிருக்க வேண்டும். இனியாவது அவர் அடுத்தடுத்த படங்கள் கொடுக்க வேண்டும், என்பது தான் என் விருப்பம். ‘இடியட்’ மக்களை மகிழ்விக்கும் ஒரு ஜாலியான படமாக இருக்கும்.” என்றார்.