கெளதம் மேனனின் ’ஜோஷ்வா : இமை போல காக்க’ மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது!
கெளதம் மேனன் இயக்கத்தில், வருண் நடிப்பில் உருவான ‘ஜோஷ்வா : இமை போல காக்க’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா : இமை போல காக்க’. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், கொரோனா பரவல் காரணம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக வெளியீட்டில் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது வரும் மார்ச் 1 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இதனை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு படம் குறித்து பேசிய இயக்குநர் கெளதம் மேனன், “நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருண் குழந்தைப் போல தான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன். கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். ஹீரோ கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். எனக்கு இது ரொம்பவே ஸ்பெஷலான படம், காரணம், ஒரு அறிமுக நடிகருடன் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் ஒரு காதல் கதையை தான் எதிர்பார்த்து வருண் வந்தார், ஆனால் நான் அவரை வைத்து ஒரு முழுமையான ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறேன். இந்த படத்திற்காக அவர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகன் வருண் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம். ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்ஷன் படம். 'மாவீரன்', 'ஜவான்' படங்களில் பணிபுரிந்த யானிக் பென் இதில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். இது எனக்குப் பெருமையான விஷயம். சூப்பரான இசை கொடுத்த கார்த்திக் ப்ரோ, என்னை அழகாகக் காட்டிய கதிர் சார், எடிட்டர் ஆண்டனி அண்ணா, போஸ்டர் டிசைன் செய்த கபிலன் என அனைவருக்கும் நன்றி. படம் ஒரு சீரியஸான மோடில்தான் இருக்கும். டிடி, கிருஷ்ணா என ஜாலியான நபர்களுடன் சீரியஸாக நடித்திருக்கிறேன். ராக்கே, கிட்டி சார், மன்சூர் அலிகான், விசித்ரா மேம் எல்லோருக்கும் நன்றி. வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கும் கெளதம் சாருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன்.” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், “'சிங்கப்பூர் சலூன்' வெற்றியைத் தொடர்ந்து இப்போது இந்தப் படத்திற்காக உங்களைச் சந்திக்கிறேன். மார்ச்1 அன்று 'ஜோஷ்வா இமை போல காக்க' படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கெளதம் சார் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன். எந்தவொரு படத்தின் கதை, படப்பிடிப்பில் நான் பொதுவாக தலையிட மாட்டேன். ஆனால், எதேச்சையாக இதன் படப்பிடிப்பு பார்க்க நேர்ந்தது. இதுவரை தயாரித்த 25 படங்களில் நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இந்தப் படம்தான். அதுவும் போய் 10 நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு வந்தேன். என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோல் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு கெளதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கெளதம் உற்சாகமாக சொன்னார். பிறகு இது ஆக்ஷன் படமாக மாறியது. வருண் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் தனது கடின உழைப்பைக் கொடுப்பார். இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்குறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். இதில் நடித்துள்ள கிருஷ்ணாவுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.
இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக ராக்கே நடித்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கியமான வேடத்தில் நடிக்க, யோகி பாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.