குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெல்’
தனது நடிப்பு மூலம் திரையுலகில் தனக்கென்று தனி பாதை வகுத்துக்கொண்ட நடிகர் குரு சோமசுந்தரம், தனது வித்தியாசமான நடிப்பு மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார். சமீபத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் சிபுவாக நடித்து அசத்தியவர் தற்போது ’பெல்’ என்ற திரைப்படத்தில் வித்தியாசமான வேடத்தில், வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒரு பரம்பரையின் ரகசியம் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்படுகிறது. அந்த ரகசியம் தவறான ஒருவருக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் அந்த பரம்பரையின் கடைசி ஒருவரான கிரகாம் பெல் என்ற பார்வையற்றவர் தான் குரு சோமசுந்தரம். ரகசியத்தை பாதுகாக்கும் குரு சோமசுந்தரம், தான் கதையின் வில்லன். அப்படியானால் அந்த ரகசியத்தை வைத்து அவர் என்ன செய்கிறார் என்பதையும், பெல் தனது வாழ்க்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறார் என்பதையும், விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார்கள்.
நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை வெயிலோன் எழுத, திரைக்கதை எழுதி ஆர்.வெங்கட் புவன் இயக்கியிருக்கிறார். ராபர்ட் இசையமைக்க, பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். பரணிகண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புரோகன் மூவிஸ் நிறுவனம் சார்பில் பீட்டர் சக்ரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்ரவர்த்தி தயாரித்துள்ளனர்.
ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சுமார் 60 நாட்கள படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.