ஹன்சிகா நரிக்குறவப் பெண்ணாக நடிக்கும் ‘காந்தாரி’!

’ஜெயம் கொண்டான்’, ’கண்டேன் காதலை’ என்று குடும்பங்கள் கொண்டாடும் படங்களுடன் இளைஞர்கள் கொண்டாடும் ‘சேட்டை, ’இவன் தந்திரன்’, ’பிஸ்கோத்’ போன்ற பல வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குநர் ஆர்.கண்ணன், தற்போது ஹன்சிகா மோத்வானியை வைத்து கமர்ஷியல் திகில் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
‘காந்தாரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ஹன்சிகா வித்தியாசமான தோற்றத்தில், முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மெட்ரோ ஷிரிஷ்,மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன்பு ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிஷங்களை தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.
நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
இப்படத்திற்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 60 லட்சம் ரூபாயில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943 ல் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. இப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
இயக்குநர் கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்து, இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரணியம் செய்கிறார். படத்திற்கு எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.
படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படத்தினை கோடை விடுமுறையை குடும்பங்களோடு கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.