Sep 25, 2021 03:06 PM

துணிந்தே ரிஸ்க் எடுத்துள்ளோம் - ’சிவகுமாரின் சபதம்’ குறித்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி

துணிந்தே ரிஸ்க் எடுத்துள்ளோம் - ’சிவகுமாரின் சபதம்’ குறித்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி

‘மீசையை முறுக்கு’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டே ரெபெல்ஸ் நிறுவனத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் காதல், நட்பு, காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய இயக்குநரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி, “நிறைய பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக 'அன்பறிவு' படத்தை எடுத்தார்கள். பொது முடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக் கதையை எழுதினேன். இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார், ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப்படம் வெற்றியடையும் போது, இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள். சத்ய ஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் Inde rebels உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். துணிந்தே ரிஸ்க் எடுத்துள்ளோம். 

 

இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தை கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி.  ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும்,  குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசுகையில், “ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் துணை கதாப்பத்திரங்களுக்கு கூட நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் கதையை எனது மகன் தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன் இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ஆதியை மனமார பாராட்டினேன். ’மூன்றாம் பிறை’ படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது. இந்த படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாக செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார். நடிகத் கதிர் உடைய ஹீயுமர் நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை, கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாக செய்துள்ளார். ஆதி படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார். கோவிடால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான் நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம்.” என்றார்.

 

இப்படத்தின் கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, கோ சேசாவுடன் இணைந்து பாடல்களையும் எழுதியுள்ளார். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு செய்ய, கே.வாசுதேவன் கலையை நிர்மாணித்துள்ளார்.

 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.