Oct 21, 2024 07:28 PM

இசை நிகழ்ச்சியில் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி!

இசை நிகழ்ச்சியில் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி!

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப்  தமிழா ஆதி ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் - ஹோம் எடிசன்’ (Return of the Dragon - Home Edition) எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமானஇசை நிகழ்ச்சி நடத்தினார். 

 

டார்கியூ எண்டர்டெயின்மெண்ட் (Torque Entertainments) நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த  இசை நிகழ்ச்சிக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.  இந்த  இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி-  மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சந்தித்து உற்சாகத்துடன் பாட்டுப்பாடி நடனமாடினார்.

 

இசை நிகழ்ச்சியில் வழக்கமாக வடிவமைக்கப்படும் மேடை போல் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேடையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடந்து சென்று, ரசிகர்களை சந்தித்தது இசை ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்தது. இளைஞர்களும் , இளம் ரசிகைகளும் ஏராளமாக ஒன்று கூடி ரசித்தனர்.  இதனால் இசை ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றனர். உற்சாக மிகுதியில் ரசிகர்களும் ஹிப் ஹாப்  தமிழா ஆதி உடன் பாட்டு பாடியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

 

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற்றிருந்த  ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிபூரணமான ஒத்துழைப்பை இலவசமாக வழங்கியது. அத்துடன் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இரவு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை இயக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

இசை நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கும், பயணத்திற்கும் திட்டமிட்டு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்ததால் .. 'நிகழ்ச்சியை எந்தவித தடங்கலும் இல்லாமல் உற்சாகமாக ரசித்து அனுபவிக்க முடிந்தது' என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.  இது அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.