Jul 02, 2023 04:52 PM

நான் கலர்புல்லான பெண்! - ஹன்சிகாவுடன் ஒரு ஜாலியான சந்திப்பு

நான் கலர்புல்லான பெண்! - ஹன்சிகாவுடன் ஒரு ஜாலியான சந்திப்பு

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி, திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஹன்சிகா, தற்போதும் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ரசிகர்களின் பேவரைட் நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 

துறுதுறு நடிப்பு, கலகலப்பான பேச்சு, அசத்தலான அழகு என தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் எளிதில் கடத்திவிடும் ஹன்சிகாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘பார்ட்னர்’. இந்த படத்தின் கதாநாயகி என்று சொல்வதை விட, கதையின் நாயகியாக, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்திருக்கிறார்.

 

அதாவது, காமெடி நடிகர் யோகி பாபு, ஒரு மருந்தினால் பெண்ணாக மாறிவிடுகிறார். அந்த பெண் தான் ஹன்சிகா. உடலில் ஹன்சிகாவாகவும், உள்ளுக்குள் யோகி பாபுவாகவும் நடித்திருக்கும் ஹன்சிகாவின், இந்த கதாபாத்திர வடிவமைப்பு படு சுவாரஸ்யமாக இருப்பதை விட, இதில் ஹன்சிகா நடித்த விதம் அமர்க்களமாக இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது படத்தின் டிரைலர். 

 

தற்போது இணையத்தில் வைரலாகும் ‘பார்ட்னர்’ டிரைலரில் இடம்பெற்ற ஹன்சிகாவின் காட்சிகள் அத்தனையும் அசத்தலாக இருப்பதோடு, படத்தில் அவர் பட்டய கிளப்பியிருப்பார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

இப்படி ஒரு சுவாரஸ்யமான வேடத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா, அந்த வேடம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கையில், “சினிமாவுக்கு நான் வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 20 ஆண்டுகளில் நான் சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதையும், ரசிகர்களின் ஆதரவும், உங்களை போன்ற ஊடகத்தினர் ஆதரவும் இருப்பதால் தொடர்ந்து நான் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். இனியும் என் பயணம் அப்படியே தொடரும்.

 

திருமணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை, நான் நானாகத்தான் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்கிறேன், இனியும் நடிப்பேன். எப்போதும் போல மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதனால், திருமணத்தால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. 

 

’பார்ட்னர்’ படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அதை கேட்கும் போதே எனக்கு அது புரிந்து விட்டது, அதனால் தான் அந்த வேடத்தில் நடித்தேன். அனைத்து நடிகைகளும் டாம் பாயாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமான வேடம். தோற்றத்தில் ஒரு அழகான பெண்ணாக இருப்பேன். என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆண் போலவே இருக்க வேண்டும். சவாலான வேடமாக இருந்தது, அதில் சரியாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

உள்ளுக்குள் ஆணாக நடிக்கும் போது எந்த காட்சி சவாலாக இருந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஹன்சிகா, “மது அருந்தும் காட்சி தான். எனக்கு எப்போதும் மது அருந்தும் காட்சியில் நடிக்கும் போது மிகவும் சவலாக இருக்கும். மது அருந்திவிட்டு போதையில் இருப்பது போல் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவே கஷ்ட்டமாக இருக்கும். இந்த படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் தான் எனக்கு சவாலாக இருந்தது. இயக்குநர் அடிக்கடி, “மேடம் போகன், ரோமியோ ஜூலியட்” என்று சொல்லி, அப்படிப்பட்ட காட்சிகளை நினைவு படுத்தியே இந்த படத்தில் உள்ள காட்சிகளை படமாக்கினார்.” என்றார்.

 

Actress Hansika

 

பொதுவாக நடிகைகளுக்கு நகைச்சுவை உணர்வு என்பது குறைவு என்று சொல்வார்கள், நீங்கள் நகைச்சுவை காட்சிகளில் சாதாரணமாக நடிக்கிறீர்களே எப்படி? என்று கேட்டதும் குஷியான ஹன்சிகா, ”இதற்கு நீங்க ஒரு முறை கை தட்டுங்க, என்று சொல்லிவிட்டு, நான் ஒரு ஜாலியான பெண் அதனால் எனக்கு இயற்கையாகவே நகைச்சுவை காட்சிகளில் நன்றாக நடிக்க முடிகிறது. அதேபோல், நான் எப்போதும் நகைச்சுவை படங்களை விரும்பி பார்ப்பேன். நான் ஒரு கலர்புல்லான பெண், எனவே தான் எனக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாக இருப்பதாக நினைக்கிறேன்.” என்றார்.

 

நிருபர்கள் எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும், குழந்தை தன்மையோடு மகிழ்ச்சியாக பதிலளித்த ஹன்சிகா, எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்? என்ற கேள்விக்கும் மிக ஜாலியாக பதில் அளித்தவர், தனக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இந்த கேள்வியா? என்று எதிர் கேள்வி கேட்டு நிருபரையே ஆஃப் செய்து விட்டார்.

 

இறுதியாக, படத்தில் ஆணாக மாறிட்டீங்க, நிஜத்தில் நீங்க ஆணாக மாறும் வாய்ப்பு கிடைத்தால் யாராக மாற நினைப்பீர்கள்? என்ற கேள்விக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்று பதில் அளித்தார்.

 

மேலும், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது பற்றி கேட்ட போது, ”31 பேரை தத்தெடுத்திருக்கிறேன், அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் செய்து வருகிறேன். தற்போது அவர்களுக்காக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறேன். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவது மட்டும் இன்றி அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை என் கடமையாக நினைக்கிறேன்.

 

ஏதோ ஏழை பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை, அவர்களுக்கான உயர்தர கல்வியை கொடுக்க வேண்டும், அவர்களுடைய அத்தியாவாச தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் என் இலக்கு. மும்பையில் கல்வி கட்டணம் என்பது மிக அதிகமாக இருக்கிறது, அது சற்று எனக்கு சவாலாக இருந்தாலும், இதுவரை அதை சரியான முறையில் நான் செய்து வருவதற்கு கடவுள் தான் காரணம் என்று நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாக பதில் அளித்தார்.

 

‘கார்டியன்’, ‘காந்தாரி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.