”பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” - ‘இடி மின்னல் காதல்’ இயக்குநரை பாராட்டிய இயக்குநர் பி.வாசு
அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில், பாவகி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இடி மின்னல் காதல்’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சிபி நாயகனாக நடிக்க, பவ்யா த்ரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யாஸ்மின் பொன்னப்பா, ஜெகன், ராதாரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் பாலாஜி மாதவன், “பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பிறகு அந்தப்படத்தில் இணைந்தேன். அந்தப்படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய அனுபவம். மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளர் பெரும் துணையாக இருந்தார். அவர் தான் நாமே பண்ணலாம் என சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. அந்த ரெண்டு பேருக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே உங்களால் முடியுமா? எனக் கேட்கவில்லை முழு ஆதரவு தந்தார்கள். ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். இந்தப்படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் சாம். மாதவன் சாருக்கு செய்த கதைக்கும் சாம் தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப்படத்தை நாம் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று சொல்வார். இந்தப்படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார். நாங்கள் எடுத்துக் குடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார். ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன், ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது, பாலசுப்பிரமணியம் படத்தின் புரடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். அவருக்கு நன்றி. காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன் அவருக்கு நன்றி. முழுப்படமும் பார்த்தாகிவிட்டது எல்லோருமே அற்புதமாக நடித்துள்ளார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் மாமா இயக்குநர் வாசு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். ஒரு நல்ல படம் தந்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் பி.வாசு பேசுகையில், “பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்கு பேசியவர்களை வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள். இதைக்கேட்ட பிறகு தான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது. இசையமைப்பாளர் சாம் மிக அருமையாகப் பேசினார். பல விசயங்கள் குறித்துத் தெளிவாகப் பேசினார். யார் ஹீரோ என கேட்காமல் என்ன கதை எனக்கேட்க வேண்டும் எனச் சொன்ன போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது. நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது. பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப்படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சிபி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல கதைக்கு மீடியா எப்போதும் முழு ஆதரவைத் தரும். எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் ஜெயச்சந்தர் பேசுகையில், “பாலாஜியே எல்லாம் பேசி விட்டார். இது எங்கள் கனவு. இந்தப்படத்திற்காக எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். எங்கள் குடும்பம் எங்கள் கூடவே இருந்தது. மிக முக்கியமாக ட்ரீம் வாரியர்ஸ் படம் பார்த்ததிலிருந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படம் கதையை நம்பி எடுத்த படம். மார்ச் 29ம் தேதி படம் வெளியாகிறது. படத்திற்கு உங்கள் ஆரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
எழுத்தாளர் ஆனந்த் குமரேசன் பேசுகையில், “பாலாஜி ஒரு டெக்னீஷியனாக அறிமுகமாகி பின் நண்பரானவர். தயாரிப்பாளராக அவரே களமிறங்கியுள்ளார், அவர் நம்பிக்கை ஜெயிக்க வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகை யாஸ்மின் பேசுகையில், “பாலாஜி மற்றும் ஜெயச்சந்தர் இருவருக்கும் என் நன்றி. படத்தில் ரோல் பத்தி சொல்ல மாட்டேன் நீங்களே படம் பார்த்து சொல்லுங்கள். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
நடிகர் வின்சென்ட் நகுல் பேசுகையில், “என் சினிமா கனவுக்கு விதை போட்ட பிரபு சாலமன் சாருக்கு முதல் நன்றி. இயக்குநர் பாலாஜி கதை சொன்னார். மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பதாக இருந்தது என சொன்னார். நான் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கா என்றேன். இருக்கு என்றார். படம் முடித்த பின் எந்த பாத்திரம் என்றாலும் நடிக்கலாம் என என் மீதே நம்பிக்கை வந்துள்ளது. நல்ல படம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பேசுகையில், “இயக்குநர் பாலாஜியை மிஷ்கின் சாரிடம் வேலை பார்த்த காலத்திலிருந்து தெரியும். மிஷ்கின் சார் எனக்கு இரண்டு கிஃப்ட் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் பாலாஜி. படம் நன்றாக வந்துள்ளது.” என்றார்.
நடிகை பவ்யா பேசுகையில், “இடி மின்னல் காதல் பெயரிலேயே மிக பெரிய அர்த்தம் இருக்கிறது. படம் வந்த பிறகு உங்களுக்கும் அந்த அர்த்தம் புரியும். பாலாஜி, பாலசுப்ரமணியம் இருவரும் எப்போதும் கூலாக இருப்பார்கள், எவ்வளவு பிரஷர் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி. நடிகர் சிபி சூப்பர் கோ ஸ்டார். மிக ஆதரவாக இருந்தார். யாஸ்மின் மிக அழகாக நடித்துள்ளார். ஜெகன் எனக்கு ஒர்க்ஷாப் எல்லாம் எடுத்தார், அவர் ரொம்ப புரபஷனல். அவரால் எனக்கு நிறைய கான்ஃபிடண்ட் வந்துள்ளது. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
நடிகர் ஜெகன் பேசுகையில், “இந்த விழாவிற்கான மெனக்கெடலே மிகவும் அருமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீடியா தரும் ஆதரவிற்கு நன்றி. பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் போலப் பேசி விட்டார். ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டுமென பாலாஜியிடம் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு மெனக்கெடுகிறார். தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகள், பி வாசு சார், இயக்குநர் உதயகுமார் அவர்கள், வாழ்த்த வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்குப் பிடித்தால் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், “பாலாஜி வேறொரு கதை தான் முதலில் சொன்னார். அப்புறம் தான் இந்தப்படம் வந்தது. ராக்கெட்ரி படத்திலிருந்தே அவரைத் தெரியும். அதில் நடித்திருப்பார். இவர் எப்படி படம் இயக்குவார் என நினைத்தேன், ஆனால் முதலில் அவர் இயக்குநர் தான் என்பது பின் தான் தெரிந்தது. அவர் இப்படத்தை எப்படி செய்துள்ளார், என்பது இங்கு பேசியவர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். எல்லோரும் இவ்வளவு கான்ஃபிடண்டாக பேசுகிறார்கள் என்றால் கதை அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எல்லோருமே அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். இயக்குநர் பாலாஜிக்கும் எனக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும். போகப்போக, அவர் என்னைப் புரிந்து கொண்டார். பாலாஜி கதைகள் நிறைய வைத்துள்ளார் எல்லாமே அருமையாக இருக்கும். தமிழில் சிறப்பான கதைகள் இருக்கிறது ஆனால் ஒரு ஹீரோ இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இங்கு கடந்த வருடம் ஜெயித்த படங்கள் எல்லாம் கண்டண்ட் நன்றாக இருந்த படங்கள் தான். இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.
நடிகர் சிபி பேசுகையில், “இந்தப்படத்தின் கதை கேட்டபோது எனக்கு முக்கியமாகப் பட்டது. மெண்டல் ஹெல்த். நமக்கு மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம் தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். பிக்பாஸ் வந்தபிறகு பல கதைகள் வந்தது, ஆனால் நாம் ஒரு படத்திற்குள் போகிறோம் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பாலாஜி அந்தளவு உண்மையான மனுஷன். அவர் எத்தனை வலிகளை அனுபவித்து வருகிறார் என்று தெரியும். எல்லோருமே உண்மையாக நேர்மையாக நம்பிக்கையுடன் உழைத்துள்ளோம். எல்லோரும் இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும். வெற்றி பெற வேண்டும் கண்டிப்பாக எல்லோரும் படம் பாருங்கள் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஹீரோ மிகத்தெளிவாகப் பேசினார். பிக்பாஸ் பற்றி அவர் சொல்லியது உண்மை. இசையமைப்பாளர் சாம் அற்புதமாக இசையமைத்துள்ளார். இயக்குநர் பாலாஜி எல்லோரையும் பற்றி மிக அன்போடு குறிப்பிட்டுப் பேசினார். படம் டிரெய்லர் மிக நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், “இயக்குநர் வாசுவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இயக்குநரின் திறமை புரிந்தது. அத்தனைப் புகழ்ந்தார். டிரெய்லர் பார்த்தவுடன் அவரது திறமையின் மேல் நம்பிக்கை வந்தது. நான்கைந்து பாத்திரங்களை வைத்து நல்ல திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் இணைத் தயாரிப்பாளர்கள் என்று 11 பெயர் வந்தது. இயக்குநருக்கு ஆதரவாக இருந்த அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் இசை மிக அருமையாக உள்ளது. படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.