”போத பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்” - ஓபனாக பேசிய கிருத்திகா உதயநிதி
முதலியார் பிரதர்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள வீடியோ இசை ஆல்பம் ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’. பிரபல பாடகி நக்ஷா சரண் பாடி நடனம் ஆடியுள்ள இந்த பாடலுக்கு நடனம் அமைத்து நக்ஷாவுடன் இணைந்து சாண்டி மாஸ்டர் நடனம் ஆடியுள்ளார்.
சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகர் அரவிந்த்சுவாமி, டாக்டர்.கமலா செல்வராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’இசை ஆல்பத்தை வெளியிட்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் நடிகர்கள் ரியாஸ்கான், பிரேம், நடிகை உமா ரியாஸ், கென் கருணாஸ், புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்க பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, “நானும் இரண்டு இசை ஆல்பங்களை இயக்கி தயாரித்திருக்கிறேன். அதனால் தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பாடலும், நக்ஷா மற்றும் சாண்டி மாஸ்டரின் நடனம் சிறப்பாக இருக்கிறது. நக்ஷா இந்த பாடலில் தனது நடனத்தை மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இந்த இடத்தில் சொன்னால் சர்ச்சையாகி விடுமோ என்று நினைக்கிறேன், எனக்கு சாண்டி மாஸ்டரின் “செம போத ஆகாதே...” பாடல் மிகவும் பிடிக்கும். அதுபோல் இந்த பாடலும் பிடித்திருக்கிறது.” என்றார்.
நடிகர் அரவிந்த்சுவாமி பேசுகையில், “இங்கு நான் சிறப்பு விருந்தினராக மட்டும் வரவில்லை. நக்ஷா சரணின் குடும்ப உறவினராகவும் வந்திருக்கிறேன். பாடல் ரொம்ப நல்லா இருந்தது. இசை ஆல்பத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.” என்றார்.
டாக்டர்.கமலா செல்வராஜ் பேசுகையில், “மது சரண் தனது மகளுக்காக இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். நக்ஷாவின் குரலும், நடனமும் கவரும் வகையில் இருக்கிறது. அவர் மேன்மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
லியோ இசையமைத்து பாடல் எழுதியிருக்கும் இந்த இசை ஆல்பத்தை ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாதவன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கலையை நிர்மாணித்துள்ளார்.