Apr 07, 2024 03:09 PM

“திரும்ப வந்துட்டேன், இனிமே தொடர்ந்து என்னை திரையில் பார்ப்பீர்கள்” - நடிகர் பிரஷாந்த் உற்சாகம்

“திரும்ப வந்துட்டேன், இனிமே தொடர்ந்து என்னை திரையில் பார்ப்பீர்கள்” - நடிகர் பிரஷாந்த் உற்சாகம்

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமை நடிகர் பிரஷாந்துக்கு மட்டுமே உள்ளது. காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும் தனி முத்திரை முத்திரை பதிக்கும் நடிகர் பிரஷாந்த் கோலிவுட்டில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது விஜயின் ‘கோட்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், பல புதிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரஷாந்த், நேற்று தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த், “நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். எனது ஒவ்வொரு பிறந்தநாளன்று நான் காலம்காலமாக செய்வது, முதலில் என் பெற்றோரிடம் ஆசி பெறுவேன், பிறகு கோவிலுக்கு செல்வேன். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன்.  அதுபோல் தான் இந்த வருட பிறந்தநாளும் அமைந்திருக்கிறது. 

 

என் பிறந்தநாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால், இந்த வருடம் அவர்கல் பலருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இந்த நற்பணியை செய்தவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு. பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது.  அதேபோல் நிறைய தண்ணீர் குடிங்க, பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்க, ஓட்டு மிகவும் முக்கியமானது.” என்றார்.

 

’அந்தகன்’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரஷாந்த், “மிகப்பெரிய பொருட்ச்செலவில், மிக பிரமாண்டமான திரைப்படமாக ‘அந்தகன்’-னை உருவாக்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட படத்தின் வெளியீடும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். நிச்சயம் விரைவில் அந்தகன் மிகப்பெரிய அளவில் வெளியாகும்.” என்றார்.

 

மேலும், மீண்டும் நீங்க எப்போது சாக்லெட் பாயாக வரப்போறீங்க? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரஷாந்த், “நான் திரும்ப வந்துட்டேன், இனிமே என்னை தொடர்ந்து திரையில் பார்க்கப் போகிறீர்கள். சாக்லெட் பாயாக மட்டும் அல்ல பல அவதாரங்களில் விரைவில் என்னை பார்ப்பீர்கள். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்று உறசாகமாக பதில் அளித்தார்.

 

பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் பேசுகையில், “நான் தினமும் மாலையில் உடற்பயிற்சி செய்வேன், பிறகு குடும்த்துடன் நேரம் செலவிடுவேன், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன், இது தான் என்னுடைய வாழ்க்கை. அப்போது எனது பழைய அலுவலகத்தில் பெரிய மைதானம் இருக்கும், அதில் தான் நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அப்படி என்னுடைய அந்த பழக்கத்தை பிரஷாந்தும் அவராகவே கத்துக்கிட்டார். நான் எதுவும் சொல்லவில்லை, அவரே எனது வழியை பின்பற்றி பத்திரிகையாளர்களிடம் நட்பாகவும், எளிமையாகவும் பழக ஆரம்பித்து விட்டார். அவருடன் எந்த நேரத்திலும் பத்திரிகையாளர்கள் நேரடியாக பேசலாம், அவர் மேனேஜர் எல்லாம் வைத்துக்கொள்ள மாட்டார். இதை நான் சொல்லிக்கொடுக்கவில்லை, அவராகவே கத்துக்கிட்டார்.

 

கதை தேர்வில் கூட நான் தலையிட மாட்டேன், அதனால் தான் பிரஷாந்த் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். அவராகவே கதை கேட்பார், அந்த கதை பிடித்திருந்தால் என்னிடம் சொல்வார். நான் புதிய இயக்குநராக இருக்கிறாரே என்று சொன்னால், கதை கேளுங்கள் நன்றாக இருக்கிறது, என்பார். அப்படி தான் இயக்குநர் ஹரி உள்ளிட்ட பல புதிய இயக்குநர்களை பிரஷாந்த் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், அவர் தற்போது பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஒரு சிறப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைக்க இருக்கிறோம், அதில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்போம்.” என்றார்.