Jan 20, 2023 06:04 AM

25 ஹீரோயின்கள் நடிக்கும் படத்திலும் நடிப்பேன் - ஆர்.ஜே.பாலாஜி

25 ஹீரோயின்கள் நடிக்கும் படத்திலும் நடிப்பேன் - ஆர்.ஜே.பாலாஜி

‘சர்தார்’, ‘காரி’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் படம் ‘ரன் பேபி ரன்’. மலையாளத்தில் மூன்று வெற்றி படங்களை இயக்கியிருக்கும் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு படம் பற்றி பேசினார்கள்.

 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், ““வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இதற்கு முன் நான் நடித்த 3 படங்களும் நான் எழுதி இயக்கிய படங்கள். ஏனென்றால், எனக்கு இது போதும் இதை செய்தால் தான் எனக்கு வெற்றி கிடைக்கும் என 3 படங்களுக்கு நடித்தேன். வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்துகொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

 

அதனால் நான் லக்ஷ்மன் சாருக்கு அழைப்பு விடுத்து பேசிய பின் தான் கிருஷ்ணகுமார் சார் அறிமுகமானார். ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் கவனம் வைக்க மாட்டேன். இதுதான் நான் 7 மாதங்கள் தொடர்பு கொள்ளாததற்கு காரணம்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது போல் தான் கிருஷ்ணகுமார் சார் வீட்டிற்கு வந்து சிரித்துக்கொண்டே கதை கூறினார். இந்த படத்தில் 33 வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன்.

 

அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.

 

அந்த 7 நாட்கள் பாக்யராஜின் மறுபிறவி தான் இயக்குநர் கிருஷ்ணகுமார். அவர் திறமையான குழுவை வைத்திருக்கிறார். நான் பொறாமைபடும் அளவிற்கு அந்த குழுவை வைத்திருக்கிறார். லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.

 

இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

 

ஐசரி கணேஷ் சார் எப்படி என் குடும்பத்தில் ஒருவரோ அப்படித்தான் லக்ஷ்மன் சாரும். கார்த்தி சார் போல, தற்போது எனக்காகவும் லக்ஷ்மன் சார் கதை கேட்க ஆரம்பித்து விட்டாராம்.

 

படத்தின் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்கான இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். சமீபத்தில் ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

 

மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கும் படத்தில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்றெல்லாம் யோசிக்க மாட்டேன், என்னை பொருத்தவரை கதை தான் ஹீரோ. அதனால், 25 ஹீரோயின்கள் நடிக்கும் படத்திலும் நான் நடிப்பேன்.” என்றார்.

 

Run Baby Run Trailer Launch

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து, என்னைத் தொடர்பு கொண்டு ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா? என்று தெரியவில்லை என்றார்கள். அப்படியென்றால், நான் முதலில் கதை கேட்கிறேன் என்று கூறினேன். என் வீட்டிற்கு இயக்குநர் கிருஷ்ணகுமார் வந்து கதை கூறினார். கதையையும், கதாபாத்திரத்தையும் விட கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்கு பிடித்து விட்டது. அவருக்காக நான் நடிக்கிறேன் என்று கூறினேன். ஒரு நல்ல மனிதரை சந்தித்த திருப்தி கிடைத்தது. அவருடைய பணியாற்றும் பாணியும் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் வசனம் உறுதியாக இருந்தது. முதல்முறையாக ஆர்.ஜே.பாலாஜியுடன் எனக்கு முதல் படம். எனக்கு நிறைய அறிவுரை கூறியிருக்கிறார். இப்படக்குழு அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ஜெயன் கிருஷ்ணகுமார் பேசுகையில், “நான் மலையாளத்தில் தான் நிறைய படங்கள் இயக்கியிருக்கிறேன். வெங்கடேஷ் சார் மூலம் தான் லக்ஷ்மண் சாரின் அறிமுகம் கிடைத்தது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்போது புது அனுபவமாக இருந்தது. கதை கூறும்போது, லக்ஷ்மண் சார் தான் ஆர்.ஜே.பாலாஜியை கூறினார். இப்படம் முழுக்க சீரியஸாகத்தான் போகும் என்று கதை கூறியதும் ஒப்புக் கொண்டார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். ஐஸ்வர்யா மேடம் கூறியது சரிதான். அவருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் படம் வெளியானதும் தெரியும்.

 

நான் முதலில் இங்கு வரும்போது மலையாளத்தில் ஒரு மாதிரி இருக்கும், இங்கு வேறு மாதிரி இருக்கும் பஎன்று பலர் கூறினார்கள். ஆனால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில், “இயக்குநரின் கதை கேட்டதும் மிகவும் பிடித்திருந்தது. அந்தளவிற்கு அவர் அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தார். கதை கேட்கும்போதே ஆர்.ஜே.பாலாஜி தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. சுமார் 7 மாத காலத்திற்குப் பிறகு தான் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. கதை கேட்டதும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். அதுவரை இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. இப்படம் சீரியஸான திரில்லர் படம். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

பெரிய பட்ஜெட், பல வெளிப்புற படப்பிடிப்புகள், நிறைய கலைஞர்கள் ஆனால், சரியாக திட்டமிட்டு வேகமாக முடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.” என்றார்.