Dec 07, 2024 02:24 PM

”24 மணி நேரத்தில் நீக்கவில்லை என்றால்...” - தயாரிப்பாளர் தனஞ்செயன் தரப்பு எச்சரிக்கை!

”24 மணி நேரத்தில் நீக்கவில்லை என்றால்...” - தயாரிப்பாளர் தனஞ்செயன் தரப்பு எச்சரிக்கை!

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரைப்பட ஆலோசகர் என தமிழ் திரையுலகில் பன்முகத்திறன் கொண்டவராக வலம் வரும் ஜி.தனஞ்செயன், தன்னைப் பற்றிய தவறான செய்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

இது குறித்து ஜி.தனஞ்செயன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 

இந்த பொது அறிவிப்பு திரு. ஜி. தனஞ்செயனின் அறிவுறுத்தலின் பேரில் எங்கள் சட்ட நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

 

திரு. ஜி. தனஞ்செயன் ஒரு புகழ்பெற்ற திரை பிரமுகர், தேசிய அளவில் சிறந்த புத்தக ஆசிரியர் மற்றும் சிறந்த விமர்சகர் என தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர். மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். 

 

கன்சாய்-நெரோலாக் பெயிண்ட்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற பெரிய உலகாலாவிய நிறுவனங்களிலும், சரிகம-எச்எம்வி, மோசர் பேர் மற்றும் டிஸ்னி-யுடிவி போன்ற திரைத்துறை தொடர்பான நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார். தனது நேர்மை மற்றும் தொழில் நேர்த்திக்காக பெரிதும் பாராட்டப்படும் நபராக அவர் திகழ்கிறார். கடந்த பத்து வருடங்கலாக திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், திரைப்பட ஆலோசகராகவும் இருந்து வரும் அவர் தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயலாற்றுகிறார்.

 

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸின் ஆலோசகராகவும் திரு. ஜி. தனஞ்செயன் உள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸில் திரு. ஜி. தனஞ்செயனின் பங்கு திரைப்பட விளம்பரம் மற்றும் வெளியீட்டிற்கு தொடர்பானது மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயாரிப்பு அல்லது வணிகம் குறித்து முடிவெடுப்பதில் அவர் ஈடுபடுவதில்லை. 

 

விமர்சனங்கள் என்ற போர்வையில் திரைப்படங்கள் மற்றும் ஆளுமைகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான  முயற்சிகளை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மேற்கொண்டுள்ளது. சங்கத்தின் பொருளாளராக உள்ள திரு தனஞ்செயன், அலுவலக விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி அதில் செயலாற்றி வருகிறார்.

 

உண்மை இவ்வாறு இருக்கையில், சங்கத்தின் தலைவர் திரு. பாரதிராஜாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அவருடைய டிஜிட்டல் கையொப்பத்தை திரு தனஞ்செயன் அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தி ஒரு கடிதத்தை வழங்கியதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தவறான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது. இது திரு தனஞ்செயன் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதோடு, இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எங்கள் வாடிக்கையாளரின் தொழில், வளர்ச்சி மற்றும் தொழில்துறையில் நற்பெயர் ஆகியவற்றுக்கு எதிரான தவறான நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. 

 

எனவே இது தொடர்பான அவதூறு பிரச்சாரங்களை அடுத்த 24 மணி நேரத்தில் நீக்குமாறு அதில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உண்மை செய்திகளை ஆதாரத்தோடு வெளியிடுமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

 

இதுபோன்ற அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்தால் விதிகளுக்கு உட்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

 

முரளி கிருஷ்ணா ஜே

ரித்யம் லீகல்

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.