Oct 07, 2023 11:47 AM

மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும் - நடிகர் சித்தார்த்

மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும் - நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து, எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘சித்தா’. அருண்குமார் இயக்கத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சிறுமிகள் பாஃபியா, சஹஸ்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ‘சித்தா’ படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சித்தார்த், “இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது. நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம். அடுத்து ஒரு மிகப்பெரிய படம் வரப்போகிறது. அதுவரை இந்தப் படத்தை எத்தனை பேரிடம் சென்று சேர்க்க முடியுமோ கொண்டு போங்கள். இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம் தான். மணி ரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினி சாரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது. பழனி என்ற ஊரும் அந்த முருகனும் எங்கள் படக்குழுவை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கும் அங்குள்ள புது இடங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ’அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணி சார் பாராட்டினார். 

 

உனக்கு தான் பாடல் மறக்க முடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி. 99% படங்கள் ஆண்களுக்காக தான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை. மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி சார் இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார். ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். அஞ்சலி நாயர் படம் ஆரம்பிக்கும் போது கர்ப்பமாகிவிட்டார். எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் அது. படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி” என்றார்.

 

Chithha Thanks Giving Meet

 

இயக்குநர் அருண்குமார் பேசுகையில், ”இந்த படத்தை எடுத்து செய்வதற்கு நானும் சித்தார்த்தும் ஒரு நாள் கூட யோசித்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இதில் வேலை பார்த்துள்ளோம். என்னை நம்பி வேலை பார்த்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கமர்சியலாகவும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் வரும் என காத்திருக்கிறேன். இந்தப் பொறுப்போடு இனி வரும் படங்கள் செய்வோம்” என்றார்.

 

இயக்குநர் சசி பேசுகையில், “’சித்தா’ படத்தில் ஒரு காட்சி வரும். தூய்மைப் பணியாளர்களைத் தவறாக பேசும் ஒருவரை கதாநாயகி அடிப்பது போல. அந்தக் காட்சியில் கண்கலங்கி விட்டேன். இதுபோல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருணின் ஃபிலிம் லாங்குவேஜ் சிறப்பாக வந்துள்ளது. எமோஷனலான, எண்டர்டெய்னிங்கான படம் இது. கிளைமாக்ஸை இதுபோல எடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது அருணுக்கு உள்ளது. தயாரிப்பாளராக சித்தார்த்தும் அந்த இடத்தை அருணுக்குக் கொடுத்துள்ளார். இதன் வெற்றி என் படத்தின் வெற்றி போல சந்தோஷமாக உள்ளது. அதைக் கொண்டாடவே இங்கு வந்தேன். தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான படம் கிடைத்துள்ளது” என்றார்.

 

நடிகை அஞ்சலி நாயர் பேசுகையில், ”இந்த படம் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி. சித்தார்த் சாருடன் எளிமையாக நடித்தோம். 'த்ரிஷ்யம்' படம் பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு ஜித்து ஜோசப் சாருக்கு நன்றி! இந்த படம் ஆரம்பித்த சில நாட்கள் நடித்த பின்பு எனக்கு இரண்டாவது குழந்தை உருவானது. ஏழு மாதங்கள் வரை படத்தில் நடித்தேன்” என்றார்.