Aug 08, 2024 10:40 AM

பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் இளையராஜா பாடல்கள்! - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்

பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் இளையராஜா பாடல்கள்! - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்

மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பல்வேறு விருதுகளை வென்ற இந்தி திரைப்படமான ‘அந்தாதுன்’ படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேட் செய்திருக்கிறார் பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். இதில் நாயகனாக டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்க, சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் விளம்பர பணிகளில் படக்குழுவினர் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுடன், ரசிகர்களுக்காக படத்தில் இருக்கும் பல சர்பிரைஸ் விசயங்கள் பற்றி இயக்குநர் தியாகராஜன் பகிர்ந்துக்கொண்டார்.

 

‘அந்தாதுன்’ என்ற இந்தி தலைப்பு ஏற்றபடி தமிழில் ‘அந்தகன்’ என்று தலைப்பு வைத்தது குறித்து கூறிய தியாகராஜன், “’அந்தாதுன்’ என்றால் இந்தியில், பார்வையற்றவர் என்று அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தை தான் ‘அந்தகன்’” என்றார்.

 

மேலும் படம் குறித்து கூறியவர், “இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அடுத்தது என்ன? என்ற பரபரப்பு, சென்டிமென்ட், சஸ்பென்ஸ் எல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும்  உருவாக்கி  படத்தை வேகமாக பயணிக்க வைத்திருப்பார். அந்த வகையில்  ஏற்கெனவே படம் வெற்றி பெற்றிருப்பதால், தமிழுக்காக பெரிய மாற்றங்கள் செய்ய வில்லை, அது தேவையுமில்லை என்று நம்புகிறேன்,  அதே சமயம்  சின்ன மாற்றங்களை மட்டும் செய்திருக்கிறேன். இது கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் புது விதமான உணர்வை கொடுக்கும்.

 

படத்தில் நாயகன் பார்வையற்ற பியானோ இசைக் கலைஞர். அதனால், பியானோ இசைக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக பிரஷாந்த் தனியாக பயிற்சி ஏதும் எடுக்கவில்லை, காரணம் அவர் சிறு வயதில் இருந்தே நன்றாக பியானோ வாசிப்பார்.

படத்தில் பியானோ இசையை கம்போஸ் பண்ணியது, லிடியன் நாதஸ்வரம். ஆனால், அதை நிஜமாகவே வாசித்தது பிரஷாந்த், அதனால் அந்த காட்சிகள் நடிப்பாக இல்லாமல், இயல்பாக இருப்பது  போல்  தெரியும். அதே போல சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் எல்லாருக்கும் பிடிக்கும்.

 

ஆனால் இந்தியில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஆயுஷ்மான் குராணா, தபு தவிர மற்றவர்கள் அதிகம் தெரியாதவர்கள். அதை , கவனத்தில் எடுத்துக் கொண்டு  இதில்  ஒவ்வொரு  கதாபாத்திரங்களிலும் முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்க  முடிவு செய்தேன். அந்த வகையில் பிரஷாந்த், பிரியா ஆனந்த் தவிர, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகிபாபு, பூவையார்னு ஏகப்பட்ட  பிரபலங்கள் இந்தக் கதைக்குள்ள வந்ததும் படம் பிரமாண்டமாக மாறிவிட்டது. அதிலும் இவர்களின் நடிப்பு கதைக்கு பெரும் பலமாக இருப்பது படத்தின் கூடுதல் சிற்பபு.

 

இந்தியில் தபு நடித்த கதாபாத்திரம் முக்கியமானது. அவரையே  தமிழிலும்  நடிக்க வைத்திருகலாமே? என்று கேட்கிறார்கள், உண்மைதான் தபு இந்தியில் ஸ்கோர் செய்திருப்பார். ஆனா, ஒரு மொழி புரியாமல் நடிக்கும் போது, உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியுமா என்று தயக்கம் வந்தது, அதனால், அந்த கதாபாத்திரத்தில் சிம்ரனை நடிக்க வைத்து இருக்கிறேன். சிம்ரன் நடிப்பு பற்றி  யாரும் சொல்லித் தெரிய வேண்டாம். ஒரிஜினலில் தபுவை   விட இந்த அந்தகனில் சிம்ரன் நடிப்பு மிக அட்ராக்டிவ்வாக இருக்கும். அதே போல் தான் சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் உட்பட ஏனைய  ஒவ்வொரு   நடிகர், நடிகைகளோட நடிப்பும் எல்லாரையும் கவரும்.

 

மேலும் ரவி யாதவ் தமிழில் படம் செய்து  ஏகப்பட்ட  ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை எப்படி, ஏன் தேடிப் பிடித்து அழைத்து வந்துள்ளீர்கள் என்று கேட்டால், ரவி யாதவ் பிரமாதமான, முக்கியமான ஒளிப்பதிவாளர். பிரஷாந்த் நடித்த செம்பருத்தி, காதல் கவிதை உட்பட ஏகப்பட்ட  படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிறகு இந்திக்கு போய் படுபிசியாகி அங்கே  நிறைய படங்கள் பண்ணியபடி  இப்போதும் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அதனால் இந்தப் படத்துக்கு அவர் கேமரா மேனாக  இருந்தால்  நன்றாக இருக்கும் என்று  நினைத்து  அழைத்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் கமிட் ஆனார். நான் மிகைப்படுத்தியோ  பெருமைக்காகவோ  சொல்ல வில்லை, அவரோட  விஷுவல் உங்களை  நிச்சயம் மிரட்டும்.

 

இதை விட மற்றொரு சிறப்பான விசயம் என்னவென்றால், படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இருக்கிறது. நவரச நாயகன் கார்த்திக், இதில் ஒரு நடிகராகவே வருகிறார். அதனால், இளையராஜா இசையில் அவர் நடித்த படங்களில் இருந்து மூன்று பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். அதற்கான முறையான அனுமதியை உரியவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறோம். மேலும், ‘அமரன்’ படத்தில் இடம் பிடித்து இன்றைக்கும் இளசுகளை கவரும் “சந்திரனே சூரியனே..” பாடலையும் பயன்படுத்தி இருக்கிறோம். அதற்கு இசையமைப்பாளர் ஆதித்யனிடம் அனுமதி வாங்கியிருக்கிறோம். அந்தக் காட்சிகள் அனைத்துமே படத்தில் படு ரசனையாக இருக்கும். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பழைய ஞாபகங்களை கிளறும் என்று உறுதியாக சொல்வேன்.” என்றார்.