Feb 23, 2025 05:03 PM

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா.விஜய் எழுதி இயக்கியிருக்கும் சாகச கற்பனை திகில் திரைப்படம் ‘அகத்தியா’. இதில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ஜீவா, ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 

 

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துக் கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

இந்நிகழ்வில் நடிகை ராஷி கண்ணா பேசுகையில், ''நான் ஏற்கனவே 'அரண்மனை 3' , 'அரண்மனை 4' போன்ற  ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட்  கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

இந்த படத்தின் தரத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் சார் அர்ப்பணிப்புடன் கூடிய  முழுமையான ஒத்துழைப்பை  வழங்கினார். இப்படம் அவருக்கும் வெற்றி படமாக அமையும். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஜீவா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். அவருடன் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மீது அன்பு செலுத்தி வரும் தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான பா. விஜய் பேசுகையில், ''அகத்தியா- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புமிகுந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்நிறுவனத்துடன் வேம் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

 

இது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொண்ட தருணம். இந்தப் படத்தின் கதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகப்பெரிய தேடல் இருந்தது. முதலில் இந்த கதையை எப்படி ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். அப்படி வெகுஜன ரசனையுடன் சொல்ல வேண்டும் என்றால் வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் கதை எழுத தொடங்கும் போது இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு ஹாரர் ஃபேண்டஸியாகவும் உருவாக்க வேண்டும் என எழுதத் தொடங்கினேன். ஏனெனில் நான் சொல்லவரும் கன்டென்ட் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதனால் கதையின் ஒரு மிகப்பெரிய பகுதியை பீரியட் ஃபிலிமாக காட்ட வேண்டிய சூழல் கதை களத்தில் ஏற்பட்டது.

 

திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் தேவை. மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனம்-  நட்சத்திர நடிகர்களின் பிஸினஸைப் பற்றி கவலைப்படாமல் சொல்லவரும் கன்டென்ட்டை புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனை தயாரிக்க இயலும். அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேட தொடங்கினோம்.

 

இந்தத் தருணத்தில் தான் நடிகர் ஜீவாவின் தொடர்பு கிடைத்தது. அவருடன் ஏற்கனவே 'களத்தில் சந்திப்போம்' திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அந்த நட்பின் காரணமாக அவரிடம் இந்தப் படத்தின் கதையை விவரித்தேன். ஜீவாவும், 'ஹாரர் படமா.. வேண்டாமே..!' என தயங்கினார். ஆனால் நானோ, 'இது ஹாரர் படம் இல்லை. ஹாரர் ஃபேண்டஸி படம். இந்த திரைப்படத்தில் நல்ல விஷயம் இருக்கிறது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும். இது ஒரு ஹாரர் அட்வென்ச்சர் படமும் கூட' என்றேன். அதன் பிறகு அவரும் தயாரிப்பாளரை தேடுகிறேன் என்றார்.  

 

பின்னர் இந்த கதையை நம்பி தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், வாருங்கள் அவரை சந்திப்போம் என்று அழைத்துச் சென்ற இடம் தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவரை அவருடைய வீட்டில் சந்தித்தோம். கதையை முழுவதுமாக  கேட்டதும் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். இந்த திரைப்படத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகையான ராஷி கண்ணா இடம் பிடித்தார்.  அதன் பிறகு மற்றொரு அழுத்தமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னோம். அவர் இந்தப் படத்தில் இணைந்தார். அதன் பிறகு சில ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் கதையில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று சொன்னேன். மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும்,  'ஆர் ஆர் ஆர்' படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். அதன் பிறகு யோகி பாபு, வி டி வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி , ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணியாற்றினர்.  இந்தப் படத்தின் கதைகளத்திற்காக ஏராளமான அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைத்தும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.

 

டாக்டர் ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய படைப்பு சுதந்திரம் கிடைக்கும். இயக்குநர்கள் ஒரு காட்சிக்கு மயில் தோகை வேண்டும் என கேட்டால்.. தயாரிப்பாளர் மயில் ஒன்றை கொண்டு வந்து தருவார். இதுதான் அவரின் பண்பு.  இதுதான் அவர் சினிமா மீது வைத்திருக்கும் கட்டற்ற நேசம், அளவற்ற காதல். இதை பார்த்து நான் பல தருணங்களில் வியந்து இருக்கிறேன்.

 

65  நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு 90 நிமிடங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.‌ இதற்காக ஓராண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.  அந்தப் பணிகளையும்  அண்மையில் நிறைவு செய்தோம். உச்சகட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த காட்சிக்கான பணிகளை 'டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்ட முன்னணி நிறுவனத்திடம் வழங்கினோம். இந்த இறுதிக் காட்சியில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கூடிய சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாக அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சி படத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்புகிறேன்.

 

'ஒரு இயக்குநர் எழுதிய திரைக்கதை முழுவதுமாக காட்சி வடிவில் செதுக்கப்பட்டிருந்தால், அந்தப் படம் இயக்குநருக்கு திருப்தி அளித்தால், அதுதான் நல்ல படைப்பாக உருவாகும்' என என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் சொல்வார். இந்த படத்தின் முதல் பிரதியை பார்வையிடும் போது எனக்கு அந்த மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தான்.  அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியை சொன்னாலும் போதாது.

 

நடிகர் அர்ஜுன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநரும் கூட அவருடைய இயக்கத்தில் உருவான படத்திற்கு பாடல்கள் எழுதுவது என்பதே சவாலான பணி. அவரை வைத்து இயக்குவது என்பது இன்னும் கூடுதலான சவால் மிக்கது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அன்றைய தினம் படமாக்கப்படும் காட்சிகளின் முழு விவரத்தையும் கையில் வைத்திருப்பார். அவரிடம் படம் தொடர்பான காட்சி தொடர்பான ஆரோக்கியமான கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டால் அவர் தன் பங்களிப்பை முழுமையாக அளித்து விடுவார். படப்பிடிப்பிற்கு முதல் நாள் வரும் போது தான் இத்தகைய வினாக்களை கேட்பார். அதற்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம் என்றால் முழு படப்பிடிப்பிற்கும் அவருடைய ஒத்துழைப்பு சிறப்பானதாக இருக்கும். இந்தப் படத்தில் கதையின் வேர் பகுதியில் இடம்பெறும் கதை களத்தில் அழுத்தமான வேடத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். அவருக்கு நான் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அதேபோல் இந்தப் படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியும் அமைந்தது.  ஒளிப்பதிவாளர் தீபக் குமார், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குநர் சண்முகம், சண்டை பயிற்சி இயக்குநர் கணேஷ், ஆடை வடிவமைப்பாளர் சாய், பல்லவி, டீனா ரோசாரியோ என பலரும் எனக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றினார்கள்.

இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் எனக்காக சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக அவருடைய பிரத்யேகமான தீம் மியூசிக் இடம் பிடித்திருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

 

'அகத்தியா' இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. அழகான தமிழ் வசனங்கள்- இனிமையான பாடல்கள்- அனைத்து தரப்பினரும் தற்போது ரசிக்கும் ஹாரர் எலிமெண்ட்ஸ்கள்- இத்துடன் ஃபேண்டஸி என்ற புதிய எலிமெண்ட்டையும் இணைத்து உருவாகியிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை.

 

படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் அளிக்க வேண்டும் என கருதுகிறேன். இதுதான் படைப்பின் இலக்கணமும் கூட. அத்தகைய முயற்சியில்தான் 'அகத்தியா' உருவாகி இருக்கிறது. அழகானதொரு கருவை சுமந்து உங்களை நோக்கி வரும் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

நான் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது," என்றார்.

 

நடிகர் ஜீவா பேசுகையில், ''இந்த படத்தின் கதையை இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லும் போது அவரிடம் 'சங்கிலி புங்கிலி கதவை திற' என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்' என சொன்னேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது.  இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும். வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும்.  பா. விஜய் 'அகத்தியா' படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார்.  இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர் - திரில்லர் - காமெடி - ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.

 

படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

 

இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களை தான் சந்திப்போம். அந்த வகையில் இந்த படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். கதையை முழுவதுமாக கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்கு காண்பித்தோம். எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்கு பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாக பொருட்செலவு செய்து தான் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும்.

 

நானும், நடிகை ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது," என்றார்.

 

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், ''இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜீவா - இயக்குநர் பா. விஜய்யையும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரையும் அழைத்து எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இப்படத்தின் கதையை சொன்னார்கள். எனக்கு பிடித்திருந்தது. அப்போது கதைக்கு டைட்டில் வைக்கவில்லை. படத்தில் ஹீரோவுக்கு அகத்தியன் என பெயர். அதனால் படத்திற்கு 'அகத்தியா' என பெயர் சூட்டினோம்.

 

படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றார்கள். அதன் பிறகு இயக்குநரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். கிராபிக்ஸ் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தில் சி ஜி மட்டுமே ஒன்றரை மணி நேரம்.  14 தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டது படக்குழு. இரண்டு மாதத்திற்கு முன்புதான் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. அதன் பிறகு படத்தை பார்த்தோம். பார்த்தவுடன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களை தயாரித்திருக்கிறது. அதில் இந்த படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது. படத்தை பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் பா விஜய்யிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியப்படைவீர்கள். இதற்காக இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. பி வி ஆர் மற்றும் சினி பொலிஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியாகிறது. 'அகத்தியா' திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருப்பதால் இந்தியா முழுவதும் வெளியாகிறது. என்னுடைய திரைப்பட தயாரிப்பு அனுபவத்தில் இந்தப் படத்தின் இயக்குநரையும் , ஒளிப்பதிவாளரையும் தான் அதிக முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். இவர்கள் பட உருவாக்கத்தின் போது நடைபெறும் அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.  

 

இந்தத் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 25 நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு எம்முடைய தயாரிப்பில் உள்ள படங்களை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.  அதில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் இடம்பெறும்.

 

என்னுடைய எல்லா திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை வேம் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும்,  எனது இனிய நண்பருமான அனீஷ் அர்ஜுன் தேவ் தான் வாங்குவார். இந்தத் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பதால் இந்தப் படத்தின் இந்தி பதிப்பு உரிமையை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது படத்தைப் பார்த்துவிட்டு, படத்திற்கு இணை தயாரிப்பாளராக வர விருப்பம் தெரிவித்தார். அவர் இணைந்த உடன் இந்த படம் இன்னும் பிரம்மாண்டமானதாக மாற்றம் பெற்றது. இந்த தருணத்தில் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

 

தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். 

 

ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் 'அகத்தியா' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.