”இது ஒரு பெரிய கனவு தான்!” - ‘கிங்ஸ்டன்’ படம் பற்றி மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் -நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ”இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர். அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார். அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும்.. அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
'தெறி', 'அசுரன்' என இரண்டு படங்கள் தாணு சார் தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது 'வாடிவாசல் ' படத்திலும் இணைந்திருக்கிறோம். இயக்குநர் சுதா கொங்காரா - அவர்களும் எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது ..நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். 'தங்கலான்' திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும். படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன்.
இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட்டில் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய கதைக்களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை கமல், என்னிடம் கதையாக சொன்ன போது எனக்குள் ஏற்பட்டது.
இந்த திரைப்படத்தில் ஜீ ஸ்டுடியோ இணைந்தது. அவர்கள் முழு ஆதரவை வழங்கினார்கள். இதற்காக இந்த தருணத்தில் அக்சய் மற்றும் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கனவில் அவர்களும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தப் படத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஜீ ஸ்டுடியோஸ், வி எஃப் எக்ஸ் டீம், திலீப் சுப்பராயன், நீரவ் ஷா, கோகுல் பினோய், எஸ். எஸ். மூர்த்தி, ஷான் லோகேஷ், பூர்ணிமா, பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், கோபி பிரசன்னா, சிங்க் சினிமா, சரிகம , அழகம் பெருமாள், சேத்தன், குமரவேல், சபுமோன், ஆண்டனி, அருண், ராஜேஷ், திவ்யபாரதி, யுவராஜ், தீவிக், வெங்கட் ஆறுமுகம், தினேஷ் குணா, கமல் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், “'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டத்தினை பார்க்கும் போது ஜீ.வி. பிரகாஷ் குமாரின் கடும் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கமல் பிரகாசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள இளம் தலைமுறையினரை கண்டறிந்து அவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்பித்து படைப்பாளிகளாக உருவாக்கும் உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோருக்கு பிறகு பின்னணி இசையில் ஜீ வி பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினை தயாரித்தேன். அந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் 'அசுரன்' திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவித தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ராசா' பாடல் ஹிட் ஆகும்.
வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன? என கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் பேசுகையில், “அடியே படத்தின் படப்பிடிப்பின் போது ஜீ. வி. பிரகாஷ் குமார் இது போன்றதொரு புதிய ஜானரில் கதையைக் கேட்டிருக்கிறேன். அதில் பணியாற்றுகிறீர்களா? என கேட்டார். கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தேன். படத்தில் பணியாற்ற தொடங்கும் தருணத்தில் இந்த படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. சர்வதேச தரத்தில் இந்த படைப்பு உருவாக வேண்டும் என அவருடைய விருப்பத்தை தெரிவித்தார். படத்தில் பணியாற்றும்போது ஒளிப்பதிவு தொடர்பான நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த படத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்த படத்தில் வி எஃப் எஸ் காட்சிகள்- கருவிகள்- ஒளி அமைப்பு - அரங்கம் - என அனைத்து விசயத்திலும் பெரிய பங்களிப்பை வழங்கினார்.
இந்தப் படத்தை தயாரிப்பதுடன் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது. அதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காகவும் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்ததற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கலை இயக்குநர் எஸ். எஸ். மூர்த்தி பேசுகையில், ”இந்தப் படத்திற்காக கடலும், கப்பலும் இணைந்த வகையில் பிரத்யேக உள்ளரங்கம் ஒன்றை வடிவமைப்பது தான் சவாலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தயாரிப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் சுதா கொங்காரா பேசுகையில், ”ஜீவி பிரகாஷ் குமாரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. அவர் சொன்னது மட்டும் இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும்.. சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போன்றது.
இங்கு ஏராளமான இளம் திறமையாளர்களை காண்கிறேன். இயக்குநர் கமல் பிரகாஷின் உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்றார்.
இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், “இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் கடுமையாக உழைத்திருக்கிறேன். ..கனவு கண்டிருக்கிறேன்.. என்பதை விட, இந்தப் படத்திற்கான எங்களுடைய உழைப்பு நிச்சயமாக திரையில் பேசும் என நம்புகிறேன்.
நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தை பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20000 ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து 'கிங்ஸ்டன் ' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ வி பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வலிமை ..அதன் உருவாக்கம் தான். இதற்காக தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- படத்தொகுப்பாளர் - சண்டை பயிற்சி இயக்குநர் - வி எஃப் எக்ஸ் குழு - ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன் இணைந்தே இருக்கும். இதனால் சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சேத்தன்- அழகம்பெருமாள்- குமரவேல்- ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகை திவ்யபாரதி பேசுகையில், ”இந்த முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. 'பேச்சுலர்' திரைப்படத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஊடகத்தினரை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
'கிங்ஸ்டன்' படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது.. எந்த மாதிரியான தோற்றத்தில்.. கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜீவி பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் கமல் பிரகாஷ் மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். நிதானமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை. இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இயக்குநர்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றது. ஒரு நாள் கூட ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் என்னிடம் பேசவே இல்லை. வேலையில் கவனமாக இருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது தண்ணீரில் நனைந்து கொண்டே இருப்போம். எனக்கு தலை முடி நீளம் அதிகம் என்பதால் எப்போதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் சகஜமாக பேசி அதனை இயல்பாகி விடுவார்கள். அதனால் அவரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நானும் சில ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை சிறப்பாக வழங்கும். அனைவரும் மார்ச் ஏழாம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் என் நண்பர். அவரை கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆதரவு வழங்கி வந்தார். அதற்காக ஜீ வி பிரகாஷ் குமாருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு முறை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். பிரம்மாண்டமாக அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்கிறேன். திவ்ய பாரதியும், ஜீவி பிரகாஷ் குமாரும் 'பேச்சுலர்' படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருந்தது. இந்தப் படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன்.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜீவி பிரகாஷ் குமாரின் நடிப்பு எனது மிகவும் பிடிக்கும். 'தலைவா' படத்தில் வாங்கண்ணா வாங்கண்ணா படத்திலும் ஜீ வி பிரகாஷ் நடனமாடிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் நடிகராகி கலக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கமல் பிரகாஷ் அடிப்படையில் தொழில்நுட்ப திறமை மிக்கவர். திரையுலகில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியிருக்கிறது என்றால்.. அதை பற்றி எங்கள் குழுவில் முதலில் தெரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொள்பவர் கமல் பிரகாஷ்.
'முதல் முத்தம்' எனும் என்னுடைய குறும்படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றாலும்.. அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், 'நீ சிறந்த எழுத்தாளராக வருவாய்' என வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துக்களால் தான் 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய படங்களை எழுதி, இயக்க முடிந்தது. என்னுடைய இந்த வெற்றிக்கு உங்களின் வாழ்த்துகள் தான் காரணம். அதனால் இந்த தருணத்தில் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், ”இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து ஜீ வி பிரகாஷ் குமார் இப்படத்தைப் பற்றி எப்போதும் உற்சாகமாக பேசிக் கொண்டே இருப்பார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். ஒரு முதல் பட இயக்குநருக்கு பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் அவருக்கு வாய்ப்பு அளித்த ஜீ வி பிரகாஷ் குமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞன் மீது வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. புது கான்செப்ட் மீது நம்பிக்கை வைப்பது. அதிலும் குறிப்பாக வி எஃப் எக்ஸ் குழுவை நம்பி ஒரு படம் எடுப்பது சவாலானது. இது தொடர்பாக ஜீ வி பிரகாஷ் குமாரிடம் ஒரு முறை வி எஃப் எக்ஸ் பட்ஜெட் என்ன? என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டை விட படத்தின் தரம் உயர்வாக இருக்கிறது.
இதை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார். இது நிச்சயமாக திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று முன்னோட்டத்தை பார்த்ததும் தெரிந்தது. நடிகர்கள்.. விசுவல் ..மியூசிக்.. எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தது. இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதை வெளியிடுவதில் பெரிய சவால் இருக்கிறது. இதுபோன்ற கன்டென்ட் ஓரியண்டட் படங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள். ஜீ வி பியுடன் இணைந்து பணியாற்றும் போது ...நாம் சொல்ல நினைக்கும் விசயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவார். அதுதான் அவருடைய தனித்துவம். என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இதுதான் தேவை. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அவர் இந்த குழு மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அறிமுக இயக்குநர் கமலுக்கும் வாழ்த்துக்கள். முதல் பட இயக்குநருக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. முதல் படம் இயக்கி, இரண்டாவது படம் இயக்கும்போதும் பலருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. குறும்படத்தை இயக்கிய அனுபவத்துடன் இதுபோன்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படத்தில் பணியாற்றுவது என்பது உங்களுக்கு கிடைத்த முக்கியமான விசயமாக நான் பார்க்கிறேன். இதில் பணி புரிந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சின்ன பட்ஜெட் படங்கள் - கன்டென்ட் படங்களுக்கு திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்கள் வருகை தருகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு 'குடும்பஸ்தன்', 'டிராகன்' போன்ற படங்களின் வெற்றி தான் சிறந்த உதாரணம். சிறிய முதலீட்டு படங்களை தயாரிப்பதில் சவால் இருந்தாலும்... அதனை வெளியிடுவதில் சவால் இருந்தாலும்... அதனை ஓ டி டி தளத்தில் விற்பனை செய்வதில் சவால் இருந்தாலும் ...தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திரையரங்குகள் தான். இதனால் என்னை போன்ற இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம். எந்த இயக்குநர்.. எந்த தருணத்தில் ..அவரை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்டாலும், உடனடியாக தொடர்பு கொண்டு சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம்.
பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான் இசை பணி நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு ? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார். ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து நான் தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் ? என்று கேட்டேன். புது இயக்குநர். ஸீ ஃபேண்டஸி ஜானர் படம்... இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார். இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.
இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி.. அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு? என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10% தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள். உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி.
நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு ..திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள். இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கமர்சியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.