ஸ்டைலிஷான ஆக்ஷன் கமர்ஷியல் படம் தான், ஆனால்...! - இயக்குநர் கெளதம் மேனன் சொன்ன ‘துருவ நட்சத்திரம்’ சீக்ரெட்ஸ்
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்த நிலையில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், பத்திரிகையாளர்களை சந்தித்து ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அதில் இடம் பெற்ற கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் வைரலாகி வருகிறது, கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “படத்தில் கிரிக்கெட் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை. ஒரு குழு பற்றிய படம், உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்த குழுவை ஒருங்கிணைக்கிறார். இதில் 11 பேர் இருப்பதால், ஒரு கிரிக்கெட் அணியோடு ஒப்பிட்டு உருவாக்கிய டிரைலர் அது. படத்திலும் அந்த வசனங்கள் இடம் பெறும். ஆனல், கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லை.” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ”இது தொடர்ச்சியான பாகங்களை கொண்ட படமாக இருக்கும். இது தான் அதன் தொடக்கம், இந்த படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். அதை தொடர்ந்து அடுத்த பாகம் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார், வேறு ஒரு ஹீரோ கூட வருவார். சூர்யாவுக்காக நான் பண்ண கதைக்கும், இதற்கும் இருக்கும் வித்தியாசம் அதில் ஒரு உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. அது இதில் இருக்காது, விக்ரம் சார் உள்ளே வந்ததால் அதை எடுத்துவிட்டேன்.
இந்த கதை முதலில் சூர்யாவுடன் பண்ணுவதாக இருந்து கைவிடப்பட்டவுடன் ரஜினி சார் கிட்ட கதையை சொன்னேன் அப்போதும் எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டு தான் சொன்னேன். ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக இருக்கும் சார், என்று தான் சொனேன். அவரும் கேட்விட்டு பிடித்திருப்பதாக சொன்னார். ஆனால், வேறு சில காரணங்களால் பண்ண முடியவில்லை. அதன் பிறகு தான் விக்ரம் உள்ளே வந்தார், அவரிடம் சொன்ன போதும் பிளாஷ்பேக் இல்லாமல் சொன்னேன் அவர் ஓகே என்று சொன்னார். ஆனால், அவர் கேட்ட ஒரே விசயம், உங்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக இருக்குமே, இதிலும் அப்படித்தானா? என்பது தான். அப்படி இருந்தால் தான் நீங்கள் பலமாக இருப்பீர்கள் என்று சொன்னவுடன் அவர் ஒகே சொல்லிவிட்டார்.
கதாபாத்திரத்தை கேட்ட பிறகு அதற்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் விக்ரம் சார் செய்தார். கூடுதலாக இதை இப்படி வைக்கலாம், எனக்கு இது வேண்டும் என்று எதையுமே அவர் சொல்லவில்லை. அதனால், அவரிடமும் நான் எதையும் கேட்டு பெறவில்லை. நீங்கள் இந்த வேடம், இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லியவுடன் அவர் அதற்கு ஏற்றவாறு நடிக்க தொடங்கி விட்டார். வில்லனாக நடித்த விநாயகனும் அப்படி தான். எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய நடிப்பை பார்த்து விக்ரம் சார் பாராட்டினார்.
முப்பை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பது போல் தான் வைத்திருக்கிறேன். 15 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவம் என்பதால் இவர்கள் யார்? எப்படி உருவானார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன். அந்த குழுவை உருவாக்குபவர் அரசு பதவியில் இருப்பவர், ஆனால் அவர் எந்த பதவியில் இருப்பவர் என்பதை இப்போது சொல்ல முடியாது. அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடனக் கலைஞர் பத்மஸ்ரீ விருது வென்ற தனஞ்செயன் நடித்திருக்கிறார். முதலில் அமிதாப் பச்சனை தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் வெளிநாடு பயணங்கள் இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது தான் தனஞ்செயன் சாரை பார்த்தேன், அவர் சரியாக இருப்பார் என்று தோன்றிது நடிக்க வைத்துவிட்டோம்.” என்றார்.
‘காக்க காக்க’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ படங்கள் ஆக்ஷன் படங்களில் ஒரு மைல்கல் என்று சொல்லாலாம், அந்த படங்களுக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு எந்த மாதிரியான வித்தியாசம் இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “’காக்க காக்க’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதை, அதற்கான வழியில் அதன் திரக்கதை இருக்கும், அவர் யார் என்பதையும் விளக்கியிருப்பேன். ஆனால், துருவ நட்சத்திரம் படத்தை பொறுத்தவரை ஒரு குழு உருவாக்கப்படுகிறது. விக்ரம் ஒரு பள்ளியில் வாத்தியாராக பணியாற்றுபவர். இது தான் அவருக்கான அடையாளம். ஆனால், அவருக்கு வேறு ஒரு உலகம் இருக்கிறது, அது யாருக்கும் தெரியாது என்பதால், அவருடைய கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய விசயங்களை இதில் செய்யவில்லை. ஒரு ஜானராக சொன்னால், இது ஒரு ஸ்பை த்ரில்லர் படம் என்று சொல்லலாம். ஆனால், ரொம்ப டெக்னிக்கலாக அதற்க்குள் நான் போகவில்லை. நாட்டுக்கு ஒரு பிரச்சனை வருகிறது அந்த பிரச்சனைக்காக அந்த குழு எப்படி பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள், என்பதை தான் சொல்லியிருக்கிறேன். இந்த குழுவினர் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பயணப்படுவார்கள். இந்தியாவுக்கு எதிரான பிரச்சனைகளை கையாள்வதற்காக உலக முழுவதும் பயணப்படும் ஒரு குழுவாக இருப்பார்கள்.” என்றார்.
ஒரு திரைப்படமாக இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும், எப்படிப்பட்ட ரசிகர்களுக்கான படமாக இருக்கும்” என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “இது அனைவருக்குமான படம் தான். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் தான் படம் இருக்கும். இது ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் கமர்ஷியல் படம் தான். ஆனால், அதை நான் ரியலாக கொடுத்திருக்கிறேன். பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை நம் ரசிகர்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். அதையே நான் திரும்ப செய்ய முயற்சிக்கவில்லை. அதே சமயம், படத்தில் உள்ள சண்டைக்காட்சிகள் ஸ்டைலிஷாகவும், ரியலாகவும் இருக்கும்.” என்றார்.
மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இப்படத்தை அடுத்தடுத்த பாகங்களாக தொடர்ந்து எடுக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ஒன்று இரண்டு பாகங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கவில்லை என்றாலும், வேறு ஒரு ஹீரோவை வைத்து அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
ஆக, நம்ம தமிழ் சினிமாவில் இயக்குநர் கெளதம் மேனன் மூலம் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட பாணியில் தொடர் பாகங்களை கொண்ட ஸ்டைலிஷ் ஆக்ஷன் உலகம் உருவாகி விட்டது.