விடா முயற்சியால் கிடைத்த வெற்றி - கோலிவுட்டின் கவனம் ஈர்த்த நடிகர் ‘ஜெய் பீம்’ அசோகன்
‘ஜெய் பீம்’ படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த குணச்சித்திர நடிகர் அசோகன், விடா முயற்சியால் தனது லட்சியப் பாதையில் வெற்றி நடை போட தொடங்கியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை பாராட்டுகிறவர்கள், படத்தில் நடித்த நடிகர்களை பாராட்ட தவறுவதில்லை. அதிலும், சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட, அம்மண்ணின் மனிதர்களாக கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, அவர்களுடைய நடிப்பு, அம்மக்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக கடத்துவதாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், ‘ஜெய் பீம்’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்தாலும், தனது நடிப்பால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அசோகன்.
மேடை நாடக கலைஞரான அசோன், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் சிறு வேடம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு ‘ஜெய் பீம்’ மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.
ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல் காட்சியிலேயே தோன்றி, தனது ஏக்கம் நிறைந்த கண்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார். பிறகு சூர்யாவுடன் நீதிமன்ற காட்சிகளில் நடித்தவர், வசனம் இல்லாமலேயே தனது கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். அவருடைய இந்த கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதத்தையும் பார்த்து ரசிகர்கள் பலர் அவருக்கு தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்து வருவதோடு, சினிமா பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டி வர, அசோகன் தற்போது ‘ஜெய் பீம்’ அசோகனாக மாறிவிட்டார்.
பாராட்டுகளுடன் பட வாய்ப்புகளும் குவிய, ’ஜெய் பீம்’ அசோகன், தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குணச்சித்திர நடிகராக உருவெடுத்திருப்பவரிடம் பேசிய போது,
தருமபுரி தான் எனது சொந்த ஊர். இளம் வயதிலேயே நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் 12 வயதில் சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்துவிட்டேன். நாடக குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்து வந்ததோடு, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திலும் உறுப்பினராக சேர்ந்தேன்.
நாடகம் நடித்து வந்ததோடு சினிமா வாய்ப்புகளும் தேடி அலைந்தேன். ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று குடும்பத்திற்காக வாழ்ந்தாலும், சினிமா மீதிருந்த ஈர்ப்பு என்னை சும்மாவிடவில்லை. அங்கேயும் தொடர்ந்து சில நாடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குநர் ராஜு முருகன் சார் தான் ‘ஜோக்கர்’ படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அப்படத்தை தொடர்ந்து ‘சூ மந்திரக்காளி’ என்ற படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு தான் ‘ஜெய் பீம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ’ஜெய் பீம்’ படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த போதே பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ’ராஜாவுக்கு ராஜாடா’, ’அட்ரஸ்’, ஹரி இயக்கத்தில் ‘யானை’ போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறேன்.
ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் பாரதிராஜா சாருடன் இணைந்து நடித்தது என்னால் மறக்க முடியாது. 30 வருடங்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்திற்கு நடிக்க வாய்ப்பு கேட்டு பல முறை சென்றிருக்கிறேன். ஆனால், இப்போது அவருடனே இணைந்து நடித்த நாட்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
நான் நேசித்த சினிமா தற்போது என்னை நேசிக்க தொடங்கியிருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்தால் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளாலும், பட வாய்ப்புகளாலும் நானும் ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் வலம் வருவது என் நீண்ட கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.
இதுவரை நான் நடித்திருக்கும் படங்கள் வெளியானால், எனக்கு இன்னும் பல நல்ல நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என்று உற்சாகத்தோடு பேசிய நடிகர் ‘ஜெய் பீம்’ அசோகன் தற்போது தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி பிரபல பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.