வரலாற்று உண்மையை களமாக கொண்டு உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜம்பு மஹரிஷி’
வரலாற்று உண்மை சம்பவத்தையும், நம் நாட்டு விவசாயம் மற்றும் அதற்கு இருக்கும் ஆபத்துகளையும் சொல்லும் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிறது ‘ஜம்பு மஹரிஷி’. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் பி.பாலாஜி, படத்தின் நாயகனாக நடிப்பதோடு, பி.தனலட்சுமியுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.
விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க முயல்கிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.
இதனுடன், திருவானை கோவிலில் ஜம்பு மகேஷ்வரர் கோவிலில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் ஜம்பு மகேஸ்வரராஜ் வெண் நாவல் மரமாய் இருக்கும் ஜம்பு மகரிஷியும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டு இருக்கும் உண்மை வரலாற்றை சேர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டதோடு, பிரம்மாண்ட காட்சி அமைப்பு மூலம் மிகப்பெரிய படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் பாலாஜிக்கு ஜோடியாக அறிமுக நடிகை பிரியா நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் “மஸ்காரா” பாடல் புகழ் அஸ்மிதா முக்கிய வேடத்தில் வருகிறார்.
மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாரிக்கப்படும் இப்படத்திற்காக சுமார் 250 அடி உயர் சிவன் சிலை மற்றும் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று சென்னை அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2000 துணை நடிகர், நடிகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ந்டன கலைஞர்கள் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.
மேலும், இப்படத்தில் அரக்கன் வாதாவியாக நடிக்கும் ‘பாகுபலி’ புகழ் பிரபாகரும், அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனான பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் மிக பிரம்மாண்டமான முறையும் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பகவதி பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைக்கிறார். பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் ஆகிய மூவரும் பாடல்கள் எழுத, சிவசங்கர் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளார். டிராகன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராஜ்கீர்த்தி படத்தொகுப்பு செய்கிறார். பி.புவனேஸ்வரன் வசனம் எழுதியுள்ளார்.
டி.வி.எஸ் பிலிம்ஸ் சார்பில் பி.பாலாஜி மற்றும் பி.தனலட்சுமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காசியில் உள்ள வாரணாசி, ஐதராபாத்தில் உள்ள கோகொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டு விட்ட இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.