‘ஜம்பு மஹரிஷி’ இரண்டாம் பாகம் உருவாகிறது! - வெற்றி விழாவில் படக்குழு அறிவிப்பு
அறிமுக நடிகர் பாலாஜி பூபாலன், கதையின் நாயகனாக நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஜம்பு மஹரிஷி’. இதில் ராதராவி, வாகை சந்திரசேகர், ‘பாகுபலி’ பிரபாகரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தேவா இசையமைத்திருக்கிறார்.
விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? என்பதை ஜம்பு மஹரிஷி கதையோடு சேர்த்து சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான பாலாஜி பூபதி, ஒளிப்பதிவாளர் பகவதி பாலா, விநியோகஸ்தர் ஜெனிஷ் ஆகியோர் ‘ஜம்பு மஹரிஷி’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை சென்னை ரோகி திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 125-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜம்பு மஹரிசி படத்தின் வெற்றி குறித்து அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நாயகன் பாலாஜி பூபாலன் கூறுகையில், “’நாங்கள் எதிர்பார்த்ததை விட படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் எங்களுக்கு புதிய உற்சாகம் கிடைத்திருப்பதோடு, நல்ல படங்களுக்கு மக்கள் எப்போது ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. எங்கள் படத்தை தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியானதற்கு விநியோகஸ்தர் ஜெனிஷ் முக்கிய காரணம், அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஜம்பு மஹரிஷி’ படம் மக்களுக்கு பிடித்ததற்கு காரணம், இது மக்களுக்கான படம். விவசாயிகளின் வாழ்க்கையை மிக சுவாரஸ்யமாக சொன்னதால் மக்கள் கொண்டாடுகிறார்கள். தியேட்டர் காரர்களும் படம் நன்றாக இருக்கிறது, கூட்டம் வருகிறது என்று சொல்கிறார்கள். இந்த அளவுக்கு படம் வெற்றியடைந்ததால் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்க இருக்கிறோம்.” என்றார்.
பயில்வான் ரங்கநாதன் பற்றி ஓரு நிருபர் கேட்ட போது ஆவேசப்பட்ட இயக்குநர் பாலாஜி பூபாலன், “பெண்களை சாமி மாதிரி வணங்கும் நாடு நம்நாடு. பயில்வான் ரங்கநாதன் பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது தவறான செயல். இப்படி பேசி பணம் சம்பாதிப்பதை விட அவர் மலத்தை சாப்பிடுவதே மேல். பெண்கள் அனைவரையும் நாம் சகோதரிகளாக பார்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு தக்க நடவடிககை எடுக்க வேண்டும்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் பகவதி பாலா பேசுகையில், “இன்று தமிழகம் முழுவதும் எங்கள் படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. விவசாயிகளுக்கான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான பேண்டஸி படமாகவும் எங்கள் படம் இருப்பது, மக்களுக்கு பிடித்திருக்கிறது. விரைவில் ‘ஜம்பு மஹரிஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளோம். முதல் பாகத்தை காசியில் தொடங்கி பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். ஜம்பு மஹரிஷி இமயமலையில் வாழ்ந்தவர் என்பதால், இரண்டாம் பாகம் முழுவதையும் இமயமலையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.