Jul 06, 2022 02:03 PM

சர்வதேச அங்கீகாரம் பெற்ற விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

சர்வதேச அங்கீகாரம் பெற்ற விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’

மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கடைசி விவசாயி’ விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக வருமான ஈட்டித்தந்த படமாக அமையவில்லை.

 

இருந்தாலும், அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்றும் ஒரு படைப்பாக உருவான இப்படத்தை பார்த்த ரசிகர்கள்  கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர். 

 

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கௌரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம், தற்போது தனது கிரீடத்தில் மற்றுமொரு வைர மகுடத்தைப் பெற்றுள்ளது.

 

Nallandi

 

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் Letterboxd எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான, ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கும் உரத்து முழங்கியிருக்கிறது.

 

இந்த தளத்தில் உலக அளவிலான சிறந்த படங்களின் பட்டியலில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த '’ஆர். ஆர். ஆர்'’  திரைப்படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த  கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் 11 வது இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், இதில் 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதனால் உற்சாகமடைந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்த தகவலை புகைப்பட ஆதாரத்துடன் இணையங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.