”சினிமா மீது மிகப்பெரிய காதல் கொண்டவர் காளிதாஸ்” - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம்
நவரசா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீஜித்.கே.எஸ் மற்றும் பிளஸி ஸ்ரீஜித் தயாரித்திருக்கும் படம் ‘அவல் பெயர் ரஜ்னி’. வினிஸ் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக நமீதா பிரமோத் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஷ்வின் குமார், ஷான் ரோமி, ரெபா மோனிகா ஜான், கருணாகரன், ரமேஷ் கண்ணா, பூ ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரங்கநாதன் ரவி ஒலிக்கலவை செய்ய, தீபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். அஷிக்.எஸ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், “விஜய் சார் சொன்ன வாழ்க்கை ஒரு வட்டம் டயலாக் தான் ஞாபகம் வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கைபிடித்து, 10 வருடத்திற்கு முன் நடிகனாக என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர், எனக்கு விக்ரம் தந்த லோகேஷ் இங்கு வந்து இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியிருக்கிறார் நன்றி. தயாரிப்பாளர் காத்திருந்து, இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. வித்தியாசம் என்று சொன்னாலே எல்லோரும் சொல்வது போல் ஆகிவிடும் ஆனால் உண்மையிலேயே இந்தப் படம் நான் இதுவரை செய்யாத ரோலில் மிக வித்தியாசமானதாக இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இன்று நான் செய்வது பெரிய படமாக இருக்கலாம் ஆனால் மாநகரம் செய்யும் போது சின்னப்பட்டமாகத் தான் இருந்தது. சின்ன படம் நன்றாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். சினிமாவில் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்றாலும், ஒரு போன் காலில், ஆபிஸ் வந்து விடுவார் காளிதாஸ். சினிமா மீது அவருக்கு மிகப்பெரிய காதல் இருக்கிறது. அவருக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறைய கதை எழுதி வருகிறார்கள். அவர் மிகச் சிறந்த நடிகர். இந்தப் படம் டிரெய்லரே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் ஸ்ரீஜித்.கே.எஸ் பேசுகையில், “எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள். எங்களுக்காக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் உங்களுக்கு மிக வித்தியாசமான அனுபவம் தரும் நன்றி.” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “அற்புதமான விழாவில் மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. சின்ன படங்கள் தயாரிப்பது வெளியிடுவது இந்த காலத்தில் கடினமாக இருக்கிறது. சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. லோகேஷ் பெரிய படம் தருகிறார் அதில் 1000 பேர் பிழைக்கிறார்கள், அதே போல் சின்ன படங்களில் 200 பேர் வரை பிழைக்கிறார்கள். சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தர வேண்டும். லோகேஷ் போன்ற இயக்குநர் இம்மாதிரி படங்களுக்கு வந்து ஆதரவு தருவது மகிழ்ச்சி. இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் மிகவும் திறமையானவர் மிக நன்றாக இயக்கியுள்ளார். காளிதாஸ் அப்பா ஜெயராமுடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன், மிகவும் சிறந்த நடிகர். இப்போது காளிதாஸுடன் நடித்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நமீதா பிரமோத் பேசுகையில், “என்னோட முதல் பை லிங்குவல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியாவது மகிழ்ச்சி. காளிதாஸ் மிகச் சிறந்த கோ ஸ்டார், ஷீட்டில் நடிக்கையில் நிறைய உதவிகள் செய்தார். இயக்குநர் மிகத் திறமையானவர், மிக நன்றாக இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இங்கு வந்தது எங்களுக்கு பெருமை. இது நல்லதொரு திரில்லர் அனுபவம் தரும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.எஸ் பேசுகையில், “என் படம் தமிழ், மலையாளம் மொழிகளில் வரவுள்ளது. படம் பாருங்கள் கண்டிப்பாக மிகவும் பிடிக்கும், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஸ்ரீதர் சாருக்கு நன்றி. லோகேஷ் பிரதருக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. இந்தப்படம் இது வரை நீங்கள் பார்க்காத திரில்லர் அனுபவத்தைத் தரும். படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.