‘கள்வா’ இயக்குநரின் புதிய குறும்படம் ‘எனக்கொரு WIFE வேணுமடா’

பத்திரிகை துறையில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா ‘கள்வா’ என்ற காதல் மற்றும் த்ரில்லர் பாணியிலான குறும்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியிலான குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
‘எனக்கொரு WIFE வேணுமடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமோகன் தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குறும்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
‘நித்தம் ஒரு வானம்’, சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் செபாஸ்டின் அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அக்ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படத்தை இயக்கியிருக்கும் ஜியா, இசையும் அமைத்துள்ளார். அபிஷேக் ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் ஏ.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இசை வடிவமைப்பு பணியை மிதுன் கவனிக்க, ஒலிப்பதிவு பணியை கோகுல் ராஜசேகர் கவனித்துள்ளார்.