ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தை துவக்கி வைத்த கமல்ஹாசன்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கிங்ஸ்டன்’. கடல் சார்ந்த சாகச திகில் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் போர்டு அடித்து படத்தை துவக்கி வைத்தார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். இவர்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திவிக் வசனம் எழுத, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்ற, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராக தினேஷ் குணாவும், நிர்வாக தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் கமல் பிரகாஷ் கூறுகையில், ”என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு 'கிங்ஸ்டன்' போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
ஜீ ஸ்டுடியோஸின் தென்னிந்திய திரைப்படப் பிரிவின் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடனான இந்த மதிப்புமிக்க படத்தில் எங்களுடைய பரிபூரண ஒத்துழைப்பு இருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜீ.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய பன்முக திறமையுடன், கமல் பிரகாஷ் இயக்கத்தில் இந்த திரைப்படத்தை வழங்குவது, எங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. கிங்ஸ்டனின் பிரம்மாண்டமான கதைக்களம் - ஒரு தனித்துவமான உலகில் அதன் பிரம்மாண்டமான தயாரிப்புடன் உருவாகி, பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ்- மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த 'கிங்ஸ்டன்' திரைப்படம் அந்த வரிசையில் உருவாகும் அற்புதமான படைப்பாகும்” என்றார்.
தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். அப்படி எனது தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கிவைத்து வாழ்த்து தெரிவித்துள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தினை என்னுடன் கைகோர்த்து தயாரிக்கவிருக்கும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கும் நன்றி. இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை” என்றார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் 25 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இந்திய சினிமாவின் முதல் கடல் பின்னணியை கொண்ட சாகச திகில் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.