Oct 28, 2017 06:34 AM

களத்தில் கமல் - எண்ணூர் துறைமுகத்தில் நேரடி ஆய்வு!

களத்தில் கமல் - எண்ணூர் துறைமுகத்தில் நேரடி ஆய்வு!

விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து ட்விட்டரில் சமூக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு, அரசியல் கருத்துக்களையும் கூறி வருகிறார். மேலும், ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு வெளிப்படையாக கண்டனமும் தெரிவித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ”எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து.  கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன” என டிவிட்டரில் தெரிவித்த கமல்ஹாசன், “தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு” என்றும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், வெறும் டிவிட்டரில் மட்டும் பதிவிடாமல், கமல்ஹாசன் இன்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

 

இதுவரை, ட்விட்டர் மூலமாக மக்களுடன் பேசி வந்த கமல்ஹாசன், இன்று நேரடியாக மக்களை சந்தித்துள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.