Sep 07, 2021 05:21 AM

’தலைவி’-க்காக காத்திருக்கும் கங்கனா ரணாவத்!

’தலைவி’-க்காக காத்திருக்கும் கங்கனா ரணாவத்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவி’. சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் உச்சத்தை தொட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கையில் பல மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. அவர் வாழ்க்கையில் மட்டும் அல்ல, அவருடைய இறப்பிலும் மர்மம் இருப்பதை அனைவரும் அறிவர்.

 

அப்படிப்பட்ட ஒருவர் பற்றிய வாழ்க்கையை சொல்லும் முதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். சவால்கள் நிறைந்த பல கதாப்பாத்திரங்களில் நடித்து இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள கங்கனா ரணாவத் உருவத்தில் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தலைவி’ படம் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் நடிகை கங்கனா ரணாவத், நடிகர் அரவிந்த்சாமி, இயக்குநர் விஜய், படத்தின் தயாரிப்பாளர் விஷ்னுவர்தன் இந்தூரி உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கங்கனா ரணாவத்,  “இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளோம். இப்படத்தை பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு கொண்டு. வந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது பெருமை. மதுபாலா மேடம் என்மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள். அர்விந்த்சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளை கேட்டறிந்தேன். சமுத்திரகனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம், இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி.” என்றார்.

 

Thalaivi

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “இப்படம் எனது கனவல்ல என்னுடைய குழுவினரின் கனவு. இந்த கனவு நனவாக உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. திரையரங்கில் படத்தை கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஜி வி இதில் அற்புதமான இசையை தந்துள்ளார் இந்தப்படத்தின் ஆத்மாவே அவர்தான். விட்டல் நம் வீட்டு பையன், மும்பையில் செட்டிலானவர். இப்படத்தில் அருமையான பணியை தந்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள். அர்விந்த்சாமி வரலாற்று சிறப்பு மிக்க நடிப்பை தந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய இயக்குநர்கள் நடித்துள்ளார்கள் அவர்களை இயக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. கங்கனாவிற்கு முழு திரைக்கதையும் தெரியும் ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகப்பெரிய படைப்பு கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.” என்றார்.

 

நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், “இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கும் என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன் தான் படம் பார்த்தேன். ஒரு மாஸ்டர் க்ளாஸ் மாதிரி தான் இருந்தது. கங்கனா, நாசர் மதுபாலா, சமுத்திரகனி இவர்களுடன் நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று தான் தோன்றியது. ஏனெனில் அனைவரது நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது. இயக்குநர் விஜய்யுடைய டீடெயிலிங், திரையில் காட்சிகளில் அவரது நுணுக்கம், பிரமிப்பாக இருந்தது. இப்படம் தியேட்டரில் வரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள். இத்திரைப்படம் ஒரு அற்புதம். இந்தியாவெங்கும் இப்படத்தை ரசிப்பார்கள். இப்படத்தில் அனைவருமே சிறப்பான பணியை தந்துள்ளார்கள்.  ஆனால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ஜீவியின் இசை தான். அந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும், காட்சிக்கு ஏற்றவாறும் மிக பொருத்தமான, பிரமிப்பான இசையை வழங்கியுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

விஜய் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசிஅயமைக்க, விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைப்ரி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்க, சைலேஷ் ஆர்.சிங், திருமால் ரெட்டி, ஹிதேஷ் தக்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிருந்தா பணியாற்றியுள்ளார்.