'கே.ஜி.எப் இயக்குநர் பாராட்டிய ‘டேக் டைவர்ஷன்’! - மே 6 ஆம் தேதி ரிலீஸ்
இந்திய சினிமாவே ‘கே.ஜி.எப் 2’ படத்தையும், அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீலையும் பாராட்டி கொண்டாடி வரும் நிலையில், இயக்குநர் பிரஷாந்த் நீல் தமிழ்த்திரைப்படம் ஒன்றின் டிரைலரை பார்த்து பாராட்டியதோடு, அப்படக்குழுவினரை வாழ்த்தி சில வரிகள் எழுதிக்கொடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு வெளியான ‘கார்கில்’ என்ற படத்தை இயக்கியவர் சிவானி செந்தில். ஒரே ஒரு கதாப்பாத்திரம் தோன்றும் படமான இப்படத்தை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியது.
தற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியாக சிவா செந்தில் இயக்கியிருக்கும் படம் தான் ‘டேக் டைவர்ஷன்’. சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் சில காட்சிகளை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
இப்படத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் சிவா என்கிற சிவக்குமார், ஏற்கனவே சில படங்களில் சிறு சிறூ வேடங்களில் நடித்திருக்கிறார். வழக்கம் போல் ‘கே.ஜி.எப்’ படக்குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றிருக்கிறார்.
சிவாவைப் பார்த்த பிரஷாந்த் நீல் அவருடைய நடிப்பு பிடித்து போக, அவருக்கு ‘கே.ஜி.எப் 2’-வில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததோடு, உதவி இயக்குநராக அவரை அருகில் வைத்துக்கொண்டார். இப்படி ’கே.ஜி.எப் 2’ படத்தில் இரண்டு ஆண்டு காலம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் பணியாற்றியவர் தான் நடிகர் சிவா.
‘சதுரங்க வேட்டை’, ‘பேட்ட’, ‘மகான்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பல படங்களில் கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரவுடியாகவும் முரட்டுத்தனமாகவும் வில்லத்தனமாகவும் நடித்துள்ளவர், இப்படத்தில் கையில் சிப்ஸ் பாக்கெட்டுடன் காதல் பார்வையுடன் முற்றிலும் மாறுபட்டு முழு கதாநாயகனாகத் தோன்றுகிறார். நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.
ஜான் விஜய் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் டிவி புகழ், ஜார்ஜ் விஜய், பால ஜெ.சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ள இப்படத்தில் தேவா பாடிய “மஸ்தானா மாஸ் மைனரு...” என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். அதே போல ”யாரும் எனக்கில்லை ஏனடி?” என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விது ஜீவா படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. அனைத்து பணிகளுடம் முடிவடைந்திருக்கும் இப்படம் வரும் மே 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.