கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஒரு படம் தேவையா? - வருத்தத்தில் கோலிவுட்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தேசிய விருது வென்றது முதல் இந்திய திரையுலகின் முக்கிய நடிகையாகவும் உயர்ந்தார். ஆனால், தேசிய விருது வாங்கிய பிறகு அவருக்கு சரியான திரைப்படங்கள் அமையவில்லை. அதிலும், தமிழில்பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார்.
தற்போது நான்கு தெலுங்குப் படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருகி கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ‘சாணிக்காயிதம்’ என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறது. அந்த படமும் தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், அப்படத்தால் கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் இனி எந்த வாய்ப்பும் கிடைக்காத ஒரு சூழல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் வெளியான ‘ராக்கி’ திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் இயக்குநர் செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் முதன்மை கதாப்பாத்திரத்தில் அண்ணன், தங்கையாக நடித்திருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை படம் என்றாலே பாசமழை பொழியும் படமாக தான் இருக்கும். ஆனால், இந்த படத்தில் தங்கையை வெறுக்கும் அண்ணனாக செல்வராகவன் நடித்திருக்கிறாராம். மேலும், எலியும், பூனையுமாக இருக்கும் அண்ணன், தங்கை ஒரு சம்பவத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்து பலரை பழி தீர்க்கிறார்கள், என்பது தான் படத்தின் கதையாம்.
இவர்களது இந்த பழி தீர்க்கும் படலம், ’ராக்கி’ படத்தின் இருந்த காட்சிகளைப் போல மிக பயங்கரமாக இருப்பதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குடும்பம் குழந்தைகளோடு படத்தை பார்க்க முடியாது, என்று படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’ படத்திற்கு ஒரு தரப்பு வரவேற்பு தெரிவித்தாலும், படத்தில் இருக்கும் மிக பயங்கரமான கொலை சம்பவ காட்சிகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதே பாணியில் அவருடைய மற்றொரு படம் வெளியாக இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதிலும், பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷை கொடூர கொலையாளியாக சித்தரித்திருப்பதால், படம் வெளியான பிறகு அவருக்கான ரசிகர் வட்டம் மறைந்துவிடும் சூழல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததோடு இல்லாமல், தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஒரு படம் தேவையா, என்று படம் பார்த்த பலர் வருத்தப்படுக் கொண்டிருக்கிறார்களாம்.