Mar 17, 2022 04:45 AM

நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’ - மிஷ்கின் பாராட்டு

நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’ - மிஷ்கின் பாராட்டு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

 

எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 

இயக்குநர் மிஷ்கின் படம் குறித்து கூறுகையில், “தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இது தான். நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது. நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது. இந்த படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. பெரிய பெரிய விருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெகு தூரத்தில் இல்லை மிக குறைவான தொலைவில் இருக்கிறது என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம். இந்த படத்தை மிக பொறுமையாக பார்க்க வேண்டும். இதுபோன்ற படங்களை பத்திரிகையாளர்களிடம் சேர்க்க வேண்டும். இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த படம்.” என்றார்.

 

இயக்குநர் லோகேஷ் கனகரான் படம் குறித்து கூறுகையில், “மிகவும் பிரமிப்பான திரைப்படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.” என்றார்.

 

Kuthiraivaal

 

இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில், “தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது. 

 

வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும்.  திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.