Mar 16, 2022 03:58 PM

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’

ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘குதிரைவால்’ உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் படம் குறித்து வெளியாகும் தகவல்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலர், படத்தை கட்டாயம் பார்த்தாக வேண்டும் என்ற எண்னத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

 

கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘வாழ்’ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார்.

 

வரும் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?”, “மேக்ஸ்ல ஒரு இல்யூசன் தியரி இருக்கு” போன்ற வசனங்கள், வழக்கமான திரைப்படத்தில் இல்லாத புதிய கதைக்களம் கொண்டதாக இப்படம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், பல்வேறு ஒடிடி நிறுவனங்கள் குதிரைவால் படத்தை வாங்க முயற்சித்த போதிலும், இப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தயாரிப்பு தரப்பு, தற்போது இந்த படத்தை ஏன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை அளித்துள்ளது.

 

இது குறித்து கூறிய படக்குழு, “நிறைய புதிய விஷயங்களை படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம்.

 

குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரம்தான் குதிரைவால் படத்திற்கு அடித்தளம்.

 

ஒரு மரபு வழிப்புனைவை இன்னொரு புனைவால் தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது. 

 

வரலாற்றில் குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை குதிரைவால் படம் சுட்டிக்காட்டும்.

 

புனைவு மூலமாக ஒட்டுமொத்த வரலாற்றையும் குதிரைவால் படம் கேள்விக்கு உட்படுத்தும்.

 

இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும் கூட. பெரியாரின் பகுத்தறிவு இப்படத்தில் இருக்கும். ஆனால் புனைவாக இருக்கும்.

 

 இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கம் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசம் உண்டு” என்று தெரிவித்துள்ளனர்.