Feb 15, 2022 11:04 AM

‘குதிரைவால்’ தமிழ் சினிமாவின் தொடக்கமாக இருக்கும் - இயக்குநர் பா.இரஞ்சித்

‘குதிரைவால்’ தமிழ் சினிமாவின் தொடக்கமாக இருக்கும் - இயக்குநர் பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

 

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில், “குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன் முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்ன போதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம்  நிறைய கற்றுக்கொள்வேன் என்று நம்பினேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் பா.இரஞ்சிதுக்குக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது உங்களுக்கு புதிய உணர்வு ஏற்படுவதோடு, முற்றிலும் வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தும். படத்தை வெற்றிகரமாக திரையரங்கில் வெளியிடும் யாழி மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷுக்கும் நன்றி.” என்றார்.

 

படத்தின் கதாநாயகி அஞ்சலி பாட்டீல் பேசுகையில், “காலா மற்றும் குதிரைவால் போன்ற பல்வேறு திரைப்படங்கள் மூலம் தனக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கிய இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமத்துவ சமுதாயத்தை முன்னிறுத்துகிறது. எந்த படிநிலையும் இல்லாமல் ஜனநாயக வழியில் திரைப்படம் எடுப்பது சாத்தியம். கலைக்காக கலையை உருவாக்க முடியும் என்பதை குதிரைவால் படம் உணர்த்தியது.” என்றார்.

 

இசையமைப்பாளர் பிரதீப் குமார் பேசுகையில், ”இந்த பாணியில் நான் இதுவரை பணியாற்றவில்லை. எல்லாமே ஒரு கண்டுபிடிப்பு போல தான் இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் மனோஜ், ஷ்யாம் மற்றும் தயாரிப்பாளர்கல் விக்னேஷ், பா.இரஞ்சித் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லினோனல் ஜாசன் பேசுகையில், “இந்தப் படம் ராஜேஷின் படைப்பு. இந்த படம் மூன்று வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு சவாலாக இருந்தது. இந்த படத்திற்காக எங்களுடன் பயணித்த பத்து பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வெவ்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மூலம் இந்த படத்தின் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் பெரிய ரசிகன், அதனால் தான் இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக நான் தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது மக்கள் நிதி மூலம் இதை தயாரிக்கலாமா என்று நண்பர் விக்னேஷிடம் ஆலோசித்தேன். அப்போது அவரே தயாரிக்க முன்வந்தார். அவர் இல்லை என்றால் இந்த படம் இந்த நிலைக்கு வந்திருக்கிறாது. இந்த படத்தில் ராஜேஷின் எழுத்து பேசப்படும். தற்போதைய சூழலில் இருக்கும் அரசியல் படத்தில் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அது படத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். ஷ்யாம் சுந்தர் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். தொடக்கம் முதல் இப்போதுவரை அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வரும் ஷ்யாம் சுந்தருக்கும் நன்றி. திரையரங்குகளில் எப்படிப்பட்ட படங்கள் வருகின்றன, எப்படிப்பட்ட படங்கள் வரவில்லை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக இந்த படம் இருப்பதோடு, திரையரங்கில் ரசிகர்களுக்கு புதிய உணர்வை கொடுக்கும் படமாக இருக்கும். அப்படி ஒரு புதிய உணர்வை ராஜேஷின் எழுத்தும், முத்துக்குமாரின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு கொடுப்பதோடு, அவர்களை இந்த படத்துடன் நிக நேர்த்தியாக தொடர்பு படுத்தும் என்று நம்புகிறேன். “ என்றார்.

 

மற்றொரு இயக்குநர் ஷயாம் சுந்தர் பேசுகையில், ”குதிரைவால் படத்தை பற்றி சொல்லும் போது எழுத்தாளர் ராஜேஷை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்த படம் உருவாக அவர் தான் காரணம். அதுமட்டும் அல்ல, அவருடைய கதையின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என் மூளையில் இருந்த பல கேள்விகளுக்கு அவருடைய எழுத்து பதில் அளித்து என்னை தெளிவுப்படுத்தியது. அதற்கும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய கூட்டு முயற்சி. அதனால், தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரே தொகையை மாத சம்பளமாக வழங்கினோம். இயக்குநராக இருந்தாலும் சரி, உதவி இயக்குநர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஒரே சம்பளம் தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்திற்கு பணியாற்றியது மட்டும் அல்ல, படமும் அப்படிப்பட்ட வகை தான். இந்த படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று திரும்ப திரும்ப சொல்கிறோம், ஆனால் அது தான் உண்மை. இந்த படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும், அந்த வகையில் படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் பிரதீப்பின் பாடல்கள் மிக சிறப்பாக இருக்கிறது. அதை ரசிகர்களிடம் சேர்த்துவிட்டாலே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் படம் ரசிகர்களை முற்றும் திரையரங்கில் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.” என்றார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஜி.ராஜேஷ் பேசுகையில், “நீங்கள் திரைப்படத்தை பரிசோதனை என்று அழைக்கலாம். ஆனால் இறுதியில் இந்த படம் சில வழிகளில் அரசியலை பற்றி பேசும் படமாக இருப்பதோடு, சில பைத்தியக்காரத்தனம் கொண்டதாகவும் உள்ளது. அதே நேரத்தில் பகுத்தறிவு உள்ளது. ஆனால், இந்த படம் சுருக்கமானது என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். போதி மறத்தடியில் உர்கார்ந்திருக்கும் புத்தராகத்தான் நான் சினிமாவை பார்க்கிறேன். அதன் மூலம் பல அரசியல்களை பேசலாம். குதிரைவால் படத்திலும் அப்படிப்பட்ட அரசியலை பேசியிருக்கிறேன். ஆனால், அதை நேரடியாக பேசவில்லை. அதே சமயம், படம் பார்ப்பவர்கள் மனதில் பல கேள்விகள் எழும், அப்படி ஒரு வகையில் அரசியலை படம் பேசியிருக்கிறது. இந்த படம் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.” என்றார். 

 

தயாரிப்பாளர் விக்னேஷ் பேசுகையில், “நான் தொழில்நுட்ப துறையை சார்ந்தவன், இப்பவும் அதே துறையில் தான் இருக்கிறேன். பொதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்குவோம், அந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்த பிறகு, யார் எந்த வேலையை செய்கிறார்கள், என்பதே நமக்கு தெரியாது. இப்படி தான் பல பெரிய நிறுவனங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு சென்று நின்றுவிடுவோம். அப்படி ஒரு சூழலில் தான் மனோஜ் என்னை அனுகினார். அவருடைய நேர்மையான அனுகுமுறையால், நாமும் எதாவது அவகையில் இதில் ஈடுபட வேண்டும் என்று நான் யோசித்தேன். தயாரிப்பாளராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. யாழி நிறுவனத்தை தொடங்கும் போது, நீ இருந்தால் தான் இதை செய்வேன், என்று மனோஜிடம் கூறினேன். என்னால் பொருளாதாரா ரீதியாக உதவி செய்ய முடியும், ஆனால், அதை முழுவதுமாக நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று மனோஜிடம் கூறினேன். ஆனால், இங்கு என்ன நடக்கிறது, ஒரு படம் என்றால் என்ன செய்கிறார்கள். எவ்வளவு பேர் இங்கு பணியாற்றுகிறார்கள் என்பதை எனக்கு வார்த்தைகளால் சொல்லாமல், பல முயற்சிகள் மூலம் எனக்கு மனோஜ் புரிய வைத்து, என்னுள் அதை இறக்கிவிட்டார். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையில் கலையின் உண்ணதமும், நேர்மையும் இருந்தது. அதனால் தான் நானும் இதனுள் அழுத்தமாக இறங்கிவிட்டேன். இந்த கலைக்காக அவர்கள் உழைக்கும் விதம் மற்றும் அவர்களுடைய உழைப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால் தான் இந்த படம் திரையரங்கில் வெளியாக வேண்டும், என்று விரும்பினேன். மக்கள் பார்க்கனும் அவர்கள் கைதட்ட வேண்டும், அது தான் இந்த கலைஞர்களின் உழைப்புக்கு இணையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் திரையங்கில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதேபோல், பா.இரஞ்சித் சார் நிறைய உதவி செய்தார். ஆரம்பத்தில் இருந்து எங்களை சரியான பாதையில் அழைத்து சென்றார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி.” என்றார்.

 

Kuthiraival

 

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “இந்த கதை என்னிடம் சொல்லும் போது, பொருளாதாரா ரீதியாக என்னால் இப்போதைக்கு உதவ முடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன். அதனை தொடர்ந்து அவர்கள் பல தயாரிப்பாளர்களை சந்தித்தார்கள். நானும், பல இடங்களுக்கு அவர்களை அனுப்பினேன். பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன் வந்தார். அப்போது கூட அவரிடம் முழு கதையை சொல்லுங்கள் என்று கூறினேன். ஏன் என்றால் சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான் ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம் நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன். இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். இந்த படம் எந்த மாதிரியான படம், இந்த படம் கமர்ஷியல் ரசிகரகள் பார்க்கும் படமா? அப்படி இல்லை என்றால் இந்த படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும், என்று கூறினேன். அதே சமயம், இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்றும் கூறினேன். அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது மனோஜ் விக்னேஷிடம் பேசுக்கொண்டு தான் இருக்கிறேன், என்று சொல்வார். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து விக்னேஷ் இந்த படத்தை ரிலீஸ் வரை எடுத்து வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. ஏன் என்றால், ஒரு படத்தை ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல் போகிறது. இது என் சினிமா பயணித்தில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழலில் விக்னேஷும், மனோஜும் படம் ஆரம்பிக்கும் போது எப்படி நட்பாக இருந்தார்களோ இன்று வரை அதே நட்போடு தொடர்வது மிகப்பெரிய விஷயம். இவர்களுடைய இந்த நட்பு தான் யாழி என்ற மிகப்பெரிய முயற்சியை உருவாக்கியிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.உண்மையிலேயே தமிழ் சினிமா சூழலாக இருக்கட்டும், கலாச்சார நடவடிக்கையாக இருக்கட்டும் யாழி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

 

குதிரைவால் அற்புதமான படமா? என்றால், இல்லை. சில குறைகள் இருக்கிறது. ஆனால், அந்த குறைகளை மறந்து, படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயங்கள் இருக்கும். இந்த கதையை கையாண்ட விதம், காட்சிகளை படமாக்கிய விதம், என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு மிக புதிதாக இருக்கும். இந்த படத்தோட அனுபவம் ரசிகர்களுக்கு மிக புதியதாகா இருக்கும். இது ஒரு ஆராய்ச்சி ரீதியிலான படம் என்று சொல்கிறார்கள். ஆனல, இது சினிமாவுக்கே ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று நம்புகிறேன். அதாவது நம் உள் உணர்வில் இருக்கும் விஷயங்களை பேசும் படமாக இருக்கும். சினிமா இன்று இருக்கும் சூழலில் திரையரங்கை விட ஒடிடி-யில் படத்தை வெளியிடலாம் என்று நான் கூறினேன். என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகி பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், ஒடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். அவர்களுக்கான புதிய விஷயத்தை சொல்லும் படம். எனவே, ரசிகர்கள் இந்த படத்தை தவறவிட கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அப்படி ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன். அதேபோல், யாழி இந்த படத்தோட இல்லாமல் பல விஷயங்களை செய்ய போகிறது. என்னுடைய நட்சத்திரம் நகர்கிறது படமும் அவர்களுடன் சேர்ந்து செய்திருக்கிறேன். முழுக்க முழுக்க காதலை பேசுகிற படம். அதேபோல், பிரதீப்பின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளது. அவருடைய பின்னணி இசையும் மிக சிறப்பாக வந்துள்ளது. யாழி உடன் சேர்ந்து நீலம் சேர்ந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம் நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.